பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு இலவச எல்பிஜி இணைப்பு வழங்கும் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி 2016 மே 1 அன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு கேஸ் அடுப்பு, முதலாவது சிலிண்டர், வைப்புத் தொகை உள்ளிட்ட ரூ.1,600-ஐ மத்திய அரசு வழங்குகிறது.
கடந்த ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 10.33 கோடி உஜ்வாலா இணைப்புகள் உள்ளன. பெண்களின் ஆரோக்கியம் மற்றும் அதிகாரத்தை மேம்படுத்துவதோடு, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் திட்டமாக இது திகழ்கிறது. இந்த திட்டத்தில் அரசு மிக முக்கியமான ஒரு மாற்றம் கொண்டு வந்திருக்கிறது. இதன்படி ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானிய தொகையானது 9 சிலிண்டர்களுக்கு என குறைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது இந்த உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுக்கு இதுநாள் வரை பெண்கள் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரை ஓராண்டில் 12 முறை பதிவு செய்து 12 சிலிண்டருக்கும் 300 ரூபாய் மானிய தொகை பெற்று வந்தனர், இனி ஆண்டுக்கு 9 சிலிண்டர்களுக்கு மட்டுமே இந்த 300 ரூபாய் மானிய தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டருக்கும் இந்த மானியம் கிடைக்கும், அதேபோல 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களுக்கு இந்த மானிய தொகை விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் ஆர்வமுள்ள தகுதியான BPL விண்ணப்பதாரர்கள் அருகிலுள்ள எல்பிஜி விற்பனை நிலையம் அல்லது விநியோக மையத்திற்குச் சென்று பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை கேட்டு பெற வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை / வாக்காளர் அட்டை
- வங்கி கணக்கு பாஸ்புக்
- இருப்பிட சான்று (மின்சாரம்/தண்ணீர்/வீட்டு ஆவணம்)
- BPL ரேஷன் கார்டு / சான்றிதழ்
- சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
Read more: இலவசங்கள் இல்லாத தவெக தேர்தல் அறிக்கை.. விஜய்க்கு கைக்கொடுக்குமா 2026 தேர்தல்..?