டெல்லி மற்றும் பிற பகுதிகளில் தெருநாய்களை எட்டு வாரங்களுக்குள் தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான, சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வு, “உள்ளூர் அதிகாரிகள் தாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை. அவர்கள் பொறுப்பேற்று செயல்பட வேண்டும்” எனக் கடுமையாக சுட்டிக்காட்டியது.
இதற்கு முன், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் தலைமையிலான அமர்வு, குடிமை அமைப்புகளின் கோரிக்கைக்கு இணங்க உத்தரவை நிறுத்த மறுத்திருந்தது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தெருநாய் கடி மற்றும் ரேபிஸ் நோயால் குழந்தைகள் உள்பட பலர் உயிரிழப்பது மிகப் பெரிய பொதுசுகாதார பிரச்சினை எனக் குறிப்பிட்டு, “யாரும் விலங்குகளை வெறுப்பவர்கள் அல்ல. ஆனால் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள்; பிரச்சினையைத் தீர்க்கவேண்டும், எதிர்க்க வேண்டியதில்லை” என்றார்.
விலங்குகளைப் பராமரிக்கும் தன்னார்வ அமைப்பின் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஆகஸ்ட் 11 உத்தரவு விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) விதிகள், 2023–ஐ மீறுகிறது என்று வாதிட்டார். அந்த விதிகள் தெருநாய்களை அவற்றின் இயல்பான வாழ்விடத்திலிருந்து இடமாற்றம் செய்வதைத் தடை செய்கின்றன. மேலும், “நிலைமை மிகவும் தீவிரமானது; ஆழமான வாதம் தேவை” என்றார்.
மனுதாரர்களின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி, போதுமான தங்குமிடங்கள் இல்லாமல் தெருநாய்களை பிடித்து அடைப்பது “வண்டியின் முன் குதிரையை வைப்பது” போல எனக் குறிப்பிட்டார். இதற்கிடயே நேற்றைய தினம் ஒரு வழக்கறிஞர் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களிடம், தெருநாய்களை கருணையுடன் நடத்த வேண்டும் என்ற மே 9, 2024 உத்தரவைச் சுட்டிக்காட்டினார். அதன் பிறகு, வழக்கு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
முன்பு, நீதிபதி பர்திவாலா, “குழந்தைகள் மீது தெருநாய் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதிகாரிகள் நகரின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து விரைவாகவே தெருநாய்களை பிடிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கின் மீது தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது;
ஆனால், விலங்கு உரிமை ஆர்வலர்கள் மற்றும் நல அமைப்புகள், டெல்லியில் மட்டும் எட்டு லட்சம் தெருநாய்கள் உள்ளன, அவற்றை தங்க வைக்கும் போதுமான வசதிகள் இல்லை என எச்சரித்தனர். இத்தகைய மாபெரும் நடவடிக்கை தளவாட சிக்கல்கள், விலங்குகள் மீதான கொடுமைகள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், தெரு நாய்கள் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரும் இடைக்கால மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. மேலும், தெரு நாய்கள் வழக்கின் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்றுடன் முடிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியது. அவசர உத்தரவுகள் அல்லது தற்காலிகத் தடை ஏதேனும் தேவையா என்பதை மட்டுமே ஆராய்ந்து வருவதாகவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும் நீதிபதிகள், “சட்டமன்றங்கள் இதற்கான விதிகளை வகுத்தாலும், அவை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. உள்ளாட்சி அமைப்புகள் தங்களின் கடமைகளைச் சரிவரச் செய்வதில்லை. உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்குரிய பொறுப்புகளை ஏற்க வேண்டும்” என என்று தெரிவித்தனர்.
Read more: காதலனை பார்க்க கடல் கடந்து வந்த காதலி.. ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலீஸ்.. அடுத்து நடந்தது என்ன..?