ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் பணிக்கொடை, ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, உள்ளிட்ட பணப்பலன்களைக் கோரி கடந்த 2024 முதல் பலமுறை மனு அளித்தும் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதி பி.புகழேந்தி முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு ஊழியர்களே நீதிமன்றத்தை நாட வேண்டிய அவல நிலை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, “மனு பெற்ற 3 நாட்களுக்குள் ஒப்புகை சீட்டு வழங்கி, அதிகபட்சமாக 30 முதல் 60 நாட்களுக்குள் உரிய காரணங்களுடன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெளிவான அரசாணைகள் உள்ளன. கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால் மனுதாரரிடம் கேட்டுப் பெற வேண்டுமே தவிர, மனுக்களைக் கிடப்பில் போடக்கூடாது. ஓய்வூதிய பலன்கள் விவகாரத்தில் தலைமை கணக்கு தணிக்கையாளர் (AG Office) 2 மாதங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்கும்போது, பிற அரசுத் துறைகள் ஏன் அவ்வாறு செயல்படுவதில்லை?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், பொதுமக்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அளிக்கும் குறைதீர் மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காலதாமதம் செய்வது அரசியலமைப்பு சட்ட மீறல் மட்டுமல்லாது, கடமை தவறுதல் மற்றும் முறைகேடு என்றே கருதப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.
மேலும், இவ்வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை செயலாளரைத் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாகச் சேர்த்த நீதிபதி, மனுக்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பரிசீலித்து முடிக்க அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும், அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அத்துடன், இந்த வழக்குகளில் உள்ள மனுக்கள் மீது தகுதியின் அடிப்படையில் 3 மாதங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Read More : குட் நியூஸ்..!! அனைத்துப் பள்ளிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!!



