தமிழ்நாடு சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என திமுகவும், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என அதிமுகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன..
புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும், தவெகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.. தமிழ்நாட்டில் கோடை வெயிலை தாண்டி தலைவர்களின் பிரச்சாரம் அனல் பறந்தது.. அதன்படி கடந்த 20 நாட்களாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் கடந்த 21-ம் தேதி மாலை 6 மணியுடன் ஓய்ந்தது..
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.. அவர்களில் 3579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராகும்.. தமிழ்நாட்டில் மொத்தமாக 5 கோடியே 73 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்..
வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவடைந்த நிலையில், சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன.. எனவே ஏற்கனவே வாக்களித்து வருவபவர்களே இந்த முறை வாக்களித்தாலும் தமிழகத்தின் வாக்கு சதவீதம் 85-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை சுதந்திரமாக நடத்த தமிழகத்திற்கு 326 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.. மேலும் 300 கம்பெனி துணை ராணுவத்தினரும், 1.20 லட்சம் தமிழக போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. தேர்தல் பணிகளுக்காக 3.60 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கை உறுதி செய்யும் விவிபேட் எந்திரங்கள் கட்டுப்பாட்டு எந்திரம் ஆகியவை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன..
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி வைக்கப்பட்டிருக்கும். அங்கு நடக்கும் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க கட்டுப்பாட்டு அறைகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.



