2000 உணவு டெலிவரி ஊழியர்கள், இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஸ்விக்கி, சொமாட்டோ, ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களில் நிழலாய் செயல்படுபவர்கள் தான் டெலிவரி ஊழியர்கள். அவர்கள் நாள்தோறும் பல கிலோமீட்டர்கள் பயணித்து, மக்களிடம் விரைவாகவும் பாதுகாப்பாகவும் பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கி வருகின்றனர்.
அத்துடன், பெட்ரோல் விலைவாசி நாளுக்கு நாள் உயரும் நிலையில், மின்சார இருசக்கர வாகனங்கள் இவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையப்போகின்றன. இதனை உணர்ந்த தமிழக அரசு, நலவாரியத்தில் பதிவு செய்த 2000 இணையம் சார்ந்த சேவை மற்றும் டெலிவரி தொழிலாளர்களுக்கு தலா ₹20,000 மானியம் வழங்கும் திட்டத்தை கடந்த 2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவித்தது.
இந்த திட்டத்திற்காக தமிழக அரசு தற்போது மொத்தமாக ரூ.4 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேர்வான பயனாளிகள் தங்களுக்கான மானியத்தைப் பெற, மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் மூலமாக விண்ணப்பத்தின் நிலையைப் பரிசீலிக்கலாம். விண்ணப்ப எண் மற்றும் தேவையான ஆவணங்களை கொண்டு அவர்கள் இதைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தின் மூலமாக தற்சார்பாக பணி செய்யும் தொழிலாளர்களுக்காக தமிழக அரசு தனிப்பட்ட “தமிழ்நாடு இணையதளம் சார்ந்த தற்சார்பு தொழிலாளர் நலவாரியத்தை” உருவாக்கியுள்ளது. இந்த வாரியத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த மானியத் திட்டம் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
மழை, வெயில் போன்ற சவாலான சூழ்நிலைகளில் கடுமையாக உழைக்கும் டெலிவரி ஊழியர்களின் உழைப்பை மதித்து, அவர்களுக்கு அரசு தரும் இந்த உதவித் தொகை, பாதுகாப்பும், செலவுச் சுமையைக் குறைக்கும் வாய்ப்பும் கொண்டதாகும். இது வேலை வாய்ப்புகள் வளர்ச்சி மற்றும் பசுமை போக்குவரத்திற்கு ஆதரவான ஒரு முன்னேற்றமான முடிவாகவும் கருதப்படுகிறது.
Read more: “அதிமுக போகிற போக்கே சரியில்லை..” திமுகவில் இணைந்த கார்த்திக் தொண்டைமான் பேட்டி..!!