தமிழக அரசு மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023 மற்றும் பல்வேறு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது.
தமிழக அரசு மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023 மற்றும் பல்வேறு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, டெலிவரி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கப்படும் என்று 2025-26 பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதற்கு முன்பு அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் மூலம் பணிபுரியும் பெண்களுக்கு ரூ.25,000 வரை மானியம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், மின்சார இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல நலவாரியத்தில் (Tamil Nadu Platform Based Gig Workers Welfare Board) பதிவு செய்த தொழிலாளர்களுக்கு புதிய மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சார இருசக்கர வாகனத்தை மானியத்தில் வாங்க விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல நலவாரியத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். ரூ.20,000 மானியத்திற்கு விண்ணப்பிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் நல வாரிய பதிவு எண்ணை உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கு பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஆதார், முகவரி சான்று ஆகியவை தேவை.
இ சேவை மையங்களுக்கு சென்றும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம். நீங்கள் இதுவரை நலவாரியத்தில் உறுப்பினர் ஆகவில்லை என்றால், https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் New Registration மூலம் உங்களுடைய வேலை விவரங்கள் மற்றும் இதர தகவல்களை உள்ளிட்டு உறுப்பினர் ஆகலாம்.