சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதே சமயம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் சென்னை அல்லிகுளம் பகுதியில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மே 8ம் தேதி நடைபெற்றது. அப்போது நீதிபதி இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையின் அடிப்படையில் மகிளா நீதிமன்றம் ஞானசேகரனுக்கு எதிரான வழக்கில் இன்று (மே 28) காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறது. முன்னதாக இந்த வழக்கில் காவல்துறை சார்பில் சாட்சி விசாரணைகள் நடைபெற்றது. 25 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டது. 70 சான்று ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் ஞானசேகரனுக்கு எதிராக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற முனைப்பில் வாதாடி உள்ளார். அண்மையில் தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு பொதுமக்கள் தரப்பில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அண்ணா பல்கலையில் மாணவியிடம் பாலியல் வன்கொடுமை தாக்குதலில் ஈடுப்பட்ட ஞானசேகரனுக்கும் சரியான தண்டனையை நீதிமன்றம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10:30 மணிக்கு சென்னை மகிளா நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்க உள்ளார்.