அடுத்த மாதம் (செப்டம்பர்) 9ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக நிற்கிறார். இருவரும் ஏற்கனவே தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர்.
இதையடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறும் நோக்கில், இரு வேட்பாளர்களும் மாநிலங்களுக்குச் சென்று அரசியல் தலைவர்களையும் எம்.பி.க்களையும் சந்தித்து வருகின்றனர். ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தமிழ்நாட்டிலிருந்து தொடங்கினார். அதற்காக இன்று தியாகராய நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் விருந்து ஏற்பாடு செய்தார்.
அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “அரசியலமைப்பை பாதுகாக்கும் பணிக்கு சுதர்சன் ரெட்டி தேவை. அவர் துணை ஜனாதிபதி பதவிக்கு தகுதியான வேட்பாளர். தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கும் மக்களுக்கும் மதிப்பளிப்பவர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோர் அனைவரும் அவரை ஏற்றுக் கொள்வார்கள். தற்போது அரசமைப்பு சட்டம் ஆபத்தில் உள்ளது. மக்களாட்சியை காக்க சுதர்சன் ரெட்டி வெற்றி பெற வேண்டும். பாஜக, ‘தமிழர்’ முகமூடி அணிந்து ஆதரவு கேட்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.