பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர், பாலியல் உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதாகக் கூறி மிக விலையுயர்ந்த மற்றும் தீங்கு விளைவிக்கும் மருந்துகளை விற்று தன்னை ஏமாற்றியதாக விஜயலட்சுமி ஆயுர்வேத கடை உரிமையாளர் விஜய குருஜி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இவரிடம் கிட்டத்தட்ட ரூ.48 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை பெங்களூரு போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். தகவலின்படி, 2023ஆம் ஆண்டு திருமணத்திற்குப் பிறகு பாலியல் பிரச்சினைகள் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். சிகிச்சைக்காக கெங்கேரி பல்நோக்கு மருத்துவமனைக்குச் சென்று வந்தபோது “பாலியல் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு” என்ற விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.
அவர் தன்னை “விஜய் குருஜி” என அறிமுகப்படுத்தி, தனது ஆயுர்வேத மருந்துகள் மூலம் பிரச்சினை முழுமையாக குணமாகும் என்று கூறியுள்ளார். குருஜி முதலில் தேவராஜ் பூட்டி எனும் மருந்து ஒரு கிராம் ரூ.1,60,000 எனவும், பவன் பூட்டி எண்ணெய் ஒரு கிராம் ரூ.76,000 எனவும் விலை கூறி விற்றுள்ளார்.
ரொக்கம் மூலமே பணம் செலுத்த வேண்டும், ஆன்லைனில் பணம் அனுப்ப வேண்டாம் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. குருஜியின் அறிவுறுத்தலை நம்பிய மென்பொருள் பொறியாளர் முதலில் ரூ. 17 லட்சம் செலவழித்துள்ளார். பின்னர் சிகிச்சை பலன் அளிக்க அதிக அளவு தேவராஜ் பூட்டியை வாங்க வேண்டும் என்று குருஜி வற்புறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். இதற்காக அவர் வங்கியில் இருந்து ரூ. 20 லட்சம் கடன் எடுத்து 18 கிராம் மருந்து வாங்கியுள்ளார்.
அதோடு “தேவராஜ் ரசபூட்டி” என்ற புதிய மருந்தையும் ஒரு கிராமுக்கு ரூ. 2,60,000 என விற்றதாகவும், அதற்காக ரூ. 10 லட்சம் பணமும் கொடுத்துள்ளார். மொத்தத்தில், ஆயுர்வேதக் கடையில் ரூ. 48 லட்சத்திற்கு மேல் செலவிட்டதாக பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.
மருந்துகளை விதிமுறைப்படி எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததோடு, சிறுநீரக செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குருஜி வழங்கிய மருந்துகளால் ஏற்பட்ட பக்க விளைவாக இருக்கலாம் என பாதிக்கப்பட்டவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குருஜியிடம் கேட்டபோது, சிகிச்சையை நிறுத்தினால் உடல்நிலை மோசமாகி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மிரட்டியுள்ளார்.
சூதாரித்துக்கொண்ட மென்பொறியாளர் நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குருஜி உண்மையில் மருத்துவத் தகுதி பெற்றவரா? விற்ற மருந்துகள் என்ன? அவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கிறதா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டம்… தமிழகம் முழுவதும் வரும் டிச.8-ம் தேதி ஆர்ப்பாட்டம்…!



