இந்தியாவின் இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வியாழன் அன்று 110 ZX டிரம் வேரியன்ட் ஸ்கூட்டரை SmartXonnect தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப விலை ரூ.84,468 ஆகும். இந்த புதிய வேரியன்ட் வாயிலாக ஜூபிடெர் புதிய தொழில்நுட்ப அம்சங்களைப் பெற்றுள்ளது. இது சாதாரண ZX டிரம் வேரியன்ட் ஸ்கூட்டரை விட ரூ.4,520 மலிவானதாகும்.
ஸ்டார்லைட் ப்ளூ, ஆலிவ் கோல்டு ஆகிய இரு வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்கூட்டரை பயனர்கள் வாங்கிக் கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டி.வி.எஸ். ஜூபிடெர் இசட்எக்ஸ் டிரம் வேரியன்ட், புளூடூத்-இணைக்கப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் வருகிறது. SmartXonnect அம்சங்களுடன், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், வாய்ஸ் அசிஸ்டண்ட், அழைப்புகள், எஸ்எம்எஸ் எச்சரிக்கைகள் போன்ற பல செயல்பாடுகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நவீன தொழில்நுட்பம் பைக் ஓட்டுபவர்களுக்கு தங்கள் பயணத்தை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் மொபைல் சார்ஜரும் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, வெகுநேர பயணங்களிலும் இந்த ஸ்கூட்டர் பயணிகளுக்கு பக்கபலமாக இருக்கும் என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர், ஒற்றை சிலிண்டருடன் வரும் ஒரு ஏர்கூல்டு எஞ்சினால் திறனூட்டப்பட்டுள்ளது. இது ஒரு 109.7cc சி.வி.டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் எஞ்சின் ஆகும்.
இதன் மோட்டார் 7.7 Bhp திறனையும், 7,500 RPM ஆற்றலையும், 8.8 Nm டார்க்கையில் கொண்டுள்ளது. லிட்டருக்கு 62 கிமீ தூரம் வரை இந்த ஸ்கூட்டர் மைலேஜ் தருமென அந்நிறுவனம் கூறியுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட காம்பி பிரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது. இரு புறங்களிலும் 130mm டிரம் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் 12 இன்ச் டியூப்-லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
டிவிஎஸ் ஜூபிடெர் அடிப்படை ரிம் மாடல் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.73,240 ஆக உள்ளது. இதன் கிளாசிக் மாடலுக்கு எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.89,648 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஆனது ஹோண்டா ஆக்டிவா, சுசுகி அக்செஸ் 125 போன்ற பிற நிறுவன ஸ்கூட்டர்களுக்கு நேரடி போட்டியாக வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.