நாட்டில் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் TVS நிறுவனத்தின் iQube ஸ்கூட்டர் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில், TVS நிறுவனம் மிக விரைவில் இந்தியாவில் ஒரு புதிய EV ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று லாஞ்ச் ஈவண்ட் குறித்த தகவலில் அந்நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்த அறிவிப்பு எலெக்ட்ரிக் வாகன ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முக்கியமான நிகழ்விற்கான அழைப்பில் TVS நிறுவனமானது, மக்களுக்காக தனித்துவம் வாய்ந்த மற்றும் உற்சாகமான தயாரிப்பு ஒன்றை கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. “Thrill has a date” என்ற டேக் லைனுடன் இதுதொடர்பான அழைப்பு ஷேர் செய்யப்பட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் லாஞ்ச் ஈவண்ட் துபாயில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.
TVS நிறுவனம் இந்திய சந்தையில் iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே விற்று வருகிறது. இந்நிலையில், தற்போதுள்ள iQube சீரிஸை விடுத்து ஆல்-நியூ எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக முற்றிலும் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்த போவதாகவும் தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி எந்த முக்கிய தகவல்களும் இதுவரை அதிகாரபூர்வமாக நிறுவனத்தால் வழங்கப்படவில்லை. இந்த புதிய தயாரிப்பு ஏற்கனவே இருக்கும் iQube அல்லது வரவிருக்கும் iQube ST உடன் எந்த தொடர்பும் கொண்டிருக்காது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
துபாயில் அறிமுக நிகழ்ச்சி நடக்க இருப்பதால் TVS-ன் வரவிருக்கும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிச்சயம் ஒரு ப்ரீமியம் தயாரிப்பாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கிடையே, டீஸர் போஸ்ட்டை பார்க்கும் போது அது Creon-ஆக இருக்கலாம் என்று யூகிக்க முடிவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். 2018 ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டை காட்சிப்படுத்தி இருந்தது. இது தவிர கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் Creon-னுடன் இணைக்கப்பட்ட TVS எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரோட் டெஸ்ட்டில் காணப்பட்டது. விரைவில் அறிமுக செய்ய உள்ள புதிய ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் சிறந்த மாற்றத்தை கொண்டு வரும் தரமான தயாரிப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.