மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன்கள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்ததாக துபாய் அரசு தெரிவித்துள்ளது.
புதன்கிழமை துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இரண்டு ட்ரோன்கள் விழுந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவத்தில் இரண்டு கானா நாட்டினர் மற்றும் ஒரு வங்கதேச நாட்டினர் சிறிய அளவில் காயமடைந்துள்ளனர். மேலும் ஒரு இந்தியர் காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளார் என்று துபாய் மீடியா அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் ஏற்பட்டாலும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து வழக்கம்போலவே நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் மெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான மோதல் உலகளாவிய விமான போக்குவரத்தையும் பாதித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதிகளில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், கத்தார் உள்ளிட்ட சில நாடுகளின் வான்வழிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பல விமான நிறுவனங்கள் தங்களின் சேவைகளை ரத்து செய்தும், சில விமானங்களை மாற்று வழிகளில் இயக்கியும் வருகின்றன. மேலும் இந்த நெருக்கடியால் உலகளவில் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளதால், விமான எரிபொருள் செலவும் அதிகரித்து விமான சேவைகளுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



