சோமாலியாவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ‘எம்.டி ஹானர் 25’ (MT Honour 25) என்ற எரிபொருள் கப்பலை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாக மீட்டனர். இருப்பினும், பாதுகாப்புப் படையினரின் மீட்பு நடவடிக்கைக்கு முன்பாகவே கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உட்பட 5 பணியாளர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘சோமாலியா டுடே’ செய்தி இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பலாவு (Palau) நாட்டு கொடியுடன் சோமாலியத் தலைநகர் மொகடிஷு நோக்கிச் சென்ற இந்தக் கப்பல், கடந்த ஏப்ரல் மாதம் 18,500 பீப்பாய் எரிபொருளுடன் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்நிலையில், சோமாலியாவின் புன்ட்லேண்ட் கடலோரக் காவல் படையினர் (PMPF) நடத்திய அதிரடி மீட்பு நடவடிக்கையின் மூலம் கப்பல் மீட்கப்பட்டு, 16 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அதற்கு முன்னரே கப்பலில் இருந்த 3 பாகிஸ்தானியர்கள், ஒரு இந்தியர் மற்றும் ஒரு மியான்மர் நாட்டவர் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு இந்தியர் மற்றும் 3 பாகிஸ்தானியர்கள் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த மே மாதம் ஏமன் அருகே கடத்தப்பட்ட ‘எம்.டி யுரேகா’ (MT Eureka) என்ற டோகோ நாட்டு எரிபொருள் கப்பலை கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். அதில் இருந்த 4 இந்தியர்கள் மற்றும் 8 எகிப்தியர்கள் என 12 பணியாளர்களும் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும், கப்பலில் இருந்த பெரும்பாலான எரிபொருளைக் கொள்ளையடித்ததுடன், கப்பலின் சில பகுதிகளுக்கு தீவைத்து சேதப்படுத்திவிட்டு கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர்.



