சேலம் மாவட்டம் கொல்லப்பட்டி பகுதியில் சட்டக்கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் கரூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள் ஹரிணி, தாய் மற்றும் தங்கையுடன் வாடகைக்கு வீடு எடுத்து முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். சஞ்சய் – ஹரிணி இருவரும் கரூரில் படித்த போது 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், தங்களுடைய காதலை சட்டக் கல்லூரியிலும் தொடர்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே, சம்பவத்தன்று இரவு ஒரு மணி அளவில் காதலி தங்கியிருந்த வீட்டிற்கு சஞ்சய் சென்றுள்ளார். அங்கு காதலி ஹரிணியுடன் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். தூக்கத்தில் பாதி இரவில் மகளைக் காணாததால், அவரது தாய் தேடிக் கொண்டிருந்தார். பிறகு திடீரென்று மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது, தனது மகளும், சஞ்சய்யும் தனியாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, சஞ்சய் – ஹரிணியும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் அங்கிருந்து தப்பிக்க வழி ஏதும் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாது தவித்த சஞ்சய், 50 அடி உயர மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சஞ்சய் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சஞ்சய் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.