அமெரிக்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மத்திய மன்ஹாட்டன் பகுதியில் மக்கள் நெரிசல் மிகுந்த இடத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில், NYPD அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் 27 வயதான ஷேன் டெவோன் தமுரா என அடையாளம் காணப்பட்டதாக சட்ட அமலாக்க வட்டாரங்கள் தெரிவித்தன. துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் நீண்ட துப்பாக்கியுடன் கட்டிடத்திற்குள் நடந்து செல்லும் புகைப்படத்தை போலீசார் பகிர்ந்துள்ளனர் . அவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதால் உயிரிழந்து கிடந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, ஷேன் தமுரா என்ற 27 வயது நபர் மாலை 6.30 மணியளவில் துப்பாக்கியுடன் 44 மாடி கட்டிடத்திற்குள் நுழைந்தார். கட்டிடத்திற்குள் நுழைந்தவுடன், அவர் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார், இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்னர், அந்த நபரும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஷேன் தமுரா லாஸ் வேகாஸில் வசிப்பவர். போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்தியவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமமும் இருந்தது.
இந்த ஆண்டு அமெரிக்காவில் 254 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, மிட் டவுன் மன்ஹாட்டன் கட்டிடத்தில் நடந்த கொடிய துப்பாக்கிச் சூடு, இந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த 254வது பொதுமக்கள் துப்பாக்கிச் சூடு ஆகும்.