நீலகிரி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செந்தில்குமார், கடந்த 23 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், உதகை அருகே உள்ள காத்தாடிமட்டம் அரசு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்த இவர், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு அறிவியல் பாடங்களை கற்பித்து வந்தார்.
சமீபத்தில், அந்த பள்ளியில் பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த போலீசார் வந்த போது, ஒரு 12 வயது மாணவி, ஆசிரியர் செந்தில்குமார் தன்னை உடலில் தகாத வகையில் தொடு முயன்றதாக புகார் அளித்தார். இதையடுத்து, அதே பள்ளியில் படிக்கும் மற்றும் 20 மாணவிகளும் அவர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இது குறித்து உடனடியாக உதகை ஊரக காவல் ஆய்வாளர் விஜயா தலைமையிலான போலீசார் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, 21 மாணவிகளுக்கும், முத்தமிடுதல், தவறான தொடுதல், தனிப்பட்ட உரையாடல்களுடன் மாணவிகளை அவமதித்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
பின்னர், செந்தில்குமருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் (Protection of Children from Sexual Offences Act) வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.