ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் போராட்டங்கள் வியாழக்கிழமை உச்சத்தை எட்டின. நாடு முழுவதும் அரசு இணைய சேவையை முடக்கிய நிலையிலும், மதகுரு ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு தீவிரமடைந்தது. போராட்டங்களில் ஏற்பட்ட அடக்குமுறையால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
போராட்டத்தின் தொடக்கம்
இந்த கலவரம் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி தெஹரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க பஜார் சந்தை மூடப்பட்டதால் தொடங்கியது. ஈரானின் நாணயம் ‘ரியல்’ வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்தது தான் இந்த எதிர்ப்புகளுக்குக் காரணம். முதலில் பொருளாதார கோபமாகத் தொடங்கிய இது, தற்போது நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வீதி போராட்டங்களாக மாறியுள்ளது. தெஹரானில் பெரிய அளவிலான மக்கள் திரள்கள் கூடின.
பொருளாதார நெருக்கடி + இஸ்ரேல் போர் விளைவுகள்
ஆண்டாண்டுகளாக தொடரும் மேற்கத்திய தடைகள் மற்றும் ஜூன் மாதம் இஸ்ரேலுடன் நடந்த போர் – இதன் விளைவுகளால் உருவான பொருளாதார நெருக்கடி
மக்களின் கோபத்தை வெடிக்க வைத்துள்ளது. இது உச்ச மதத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெயி தலைமையிலான ஆட்சிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
டிரம்ப் கடும் எச்சரிக்கை
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரான் அரசு மக்களை கொல்லத் தொடங்கினால், அமெரிக்கா கடுமையாக பதிலடி கொடுக்கும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதிகரிக்கும் உயிரிழப்புகள்
நார்வேயைத் தளமாக கொண்ட ஈரான் மனித உரிமைகள் அமைப்பு, இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.. அதில் 8 சிறார்களும் அடங்குவர்.. புதன்கிழமை மட்டும் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் – இதுவே மிக மோசமான நாள்.
ஈரான் மனித உரிமைகள் அமைப்பு இயக்குநர் மக்மூத் அமிரி-மொகத்தம் இதுகுறித்து பேசிய போது “அடக்குமுறை நாளுக்கு நாள் கொடூரமாகவும் விரிவாகவும் மாறுகிறது. 2000-க்கும் மேற்பட்டோர் கைது, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.” என்று தெரிவித்தார்..
ஆனால், ஈரான் அரசு ஊடகங்கள் 21 பேர் மட்டுமே இறந்தனர் என்று கூறுகின்றன.
புதன்கிழமை, தெஹரான் அருகே கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற ஒரு போலீஸ் அதிகாரியும் உயிரிழந்ததாக தகவல்.
நாடு முழுவதும் இணைய முடக்கம்
“ஈரான் முழுவதும் இணைய சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது” என இணைய கண்காணிப்பு அமைப்பு நெட்பிளாக்ஸ் அமைப்பு அறிவித்தது. ஈரானின் 31 மாகாணங்களிலும் 348 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. முன்னாள் மன்னர் மகன் ரேசா பஹ்லவி பெரிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இராக் நாட்டில் உள்ள ஈரானிய குர்து கட்சிகள், மேற்கு ஈரானில் பொது வேலைநிறுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டன.
30 நகரங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளது.. கெர்மான்ஷா, கம்யாரான் பகுதிகளில் போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியது. அபாதானில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரின் கண் மீது நேரடியாக சுட்டதாக கூறப்படுகிறது.. போராட்டங்களில் ஈடுபடும் காமெனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அமீர் கபீர் பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
உலக நாடுகள் எதிர்வினை
ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் ““மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். வன்முறையை தவிர்க்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.. ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் “அதிக அளவில் பலம் பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.
தெற்கு ஈரானில் கூசெனர் நகரில், அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்த முன்னாள் ராணுவ தளபதி காசிம் சோலேமானியின் சிலையை மக்கள் இழுத்து வீழ்த்தினர்.
இந்தப் போராட்டங்கள் 2022–23-ல் மக்சா அமினி மரணத்திற்குப் பின் நடந்த போராட்டங்களுக்கு பிறகு, ஈரானில் நடந்த மிகப் பெரிய கலவரம் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. போராட்டக்காரர்களையும் பொதுமக்களையும் பாதுகாப்புப் படைகள் தாக்கி கொன்றுள்ளன; இது சட்டவிரோத வன்முறை என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
Read More : “முதலில் சுடுவோம், அப்புறம் தான் கேள்வி கேட்போம்..” ட்ரம்புக்கு டென்மார்க் கடும் எச்சரிக்கை..! என்ன காரணம்?



