அயர்லாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆறு வயது சிறுமியை இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுங்கள் என்று கூறி கொடூரமான தாக்குதல் நடத்திய சம்பவம், அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் வாட்டர் போர்டு பகுதியில் நேற்று முன்தினம் மாலை, தனது வீட்டிற்கு வெளியே நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த ஆறு வயது சிறுமியை, அப்பகுதியில் வந்த 12 முதல் 14 வயதிற்குட்பட்ட சில சிறுவர்கள் “இந்தியாவுக்கு திரும்பி போங்கள்” என கூறி, இனவெறி அடிப்படையில் சிறுமி மீது சைக்கிள் மூலம் தாக்குதல் நடத்தினர்.
மிகவும் கொடூரமாக, அந்த சிறுவர்கள் சைக்கிளை சிறுமியின் பிறப்புறுப்பு பகுதியில் ஏற்றி தாக்கியதுடன், முகத்தில் குத்தியும் தாக்கினர். இரத்தம் வழிந்து கிடந்த சிறுமி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த சிறுமி, பயத்தில் படுக்கையில் அழுகையுடன் தவித்து வருவதாகவும், வீட்டை விட்டு வெளியே செல்ல கூட மிகவும் பயப்படுவதாக, அவரது தாயார் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் கூறியதாவது: நான் ஒரு செவிலியர். சமீபத்தில் அயர்லநாந்து குடியுரிமை பெற்று வாட்டர்போர்டில் குடியிருந்து வருகிறேன். எனது 6 வயது மகள் வீட்டின் அருகே விளையாடும் போது, அங்கு வந்த சிறுவர்கள் சிலர், இந்தியாவுக்கு திரும்பிச்செல்லுங்கள் என்று கூறி தாக்கி உள்ளனர். எனது மகளின் அந்தரங்கப் பகுதிகளில் சைக்கிளால் தாக்கியதாகவும், அவர்களில் ஐந்து பேர் அவரது முகத்தில் குத்தியதாகவும் எனது மகளின் தோழிகள் என்னிடம் தெரிவித்தனர்.
தனது மகள், தற்போது படுக்கையில் அழுது கொண்டே இருக்கிறாள். இப்போது வெளியே விளையாட மிகவும் பயப்படுகிறாள்.எங்கள் சொந்த வீட்டிற்கு முன்னால் கூட நாங்கள் இனி இங்கு பாதுகாப்பாக இருக்கமுடியவில்லை. பயமின்றி அவளால் விளையாட முடியாது. அவளுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவளைப் பாதுகாக்க முடியவில்லை. இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து அயர்லாந்து போலீசாரால் விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோன்று, கடந்த இரண்டு வாரங்களில் மூன்று வகையான தாக்குதல்கள், அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு எதிராக நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பல்வேறு மனித உரிமை அமைப்புகள், இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய அரசு மற்றும் தூதரகம் சார்பாக, அயர்லாந்து அரசிடம் இந்தச் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: BREAKING: அதிகாலையிலே என்கவுன்டர்.. திருப்பூர் SSI கொலை வழக்கில் போலீஸ் அதிரடி..!!