போலியான வரி விலக்குகள் கோருவோர் மீது நேரடி வரிகள் வாரியம் நடவடிக்கை எடுக்கிறது. வருமான விவரங்களை சரிசெய்ய “நட்ஜ்” இயக்கம் தொடக்கம்.
வரி விலக்குகள் பெற போலியான தகவல்களுடன் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வதில் ஈடுபட்ட பல இடைத்தரகர்கள் மீது வருமான வரிச் சட்டத்தின் கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) நடவடிக்கை எடுத்துள்ளது. பலர் தவறான தகவல்களுடன் வருமான விவரங்களை தாக்கல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்ததாக போலியான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கிடமான உரிமைகோரல்களை முன்கூட்டியே கண்டறிந்து, தரவு சார்ந்த அணுகுமுறையை சிபிடிடி வலுப்படுத்தியுள்ளது. வரி செலுத்துவோருக்கு உகந்த நடவடிக்கையாக, ‘நட்ஜ்’ என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது அவர்களின் வருமான வரிக் கணக்கு தாக்கல்களை (ஐடிஆர்) புதுப்பிக்கவும், தவறான கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் திரும்பப் பெறவும் வாய்ப்பளிக்கிறது. அத்தகைய வரி செலுத்துவோருக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள், மின்னஞ்சல்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு வரி செலுத்துவோரும், எந்தவொரு தகவல் தொடர்பையும் தவறவிடாமல் இருக்க, வரித் துறையிடம் விவரங்களைத் தாக்கல் செய்யும் போது, சரியான மொபைல் எண்களும், மின்னஞ்சல் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.வரி விலக்குக்கான விதிகள், புதுப்பிக்கப்பட்ட வருமான வரி தாக்கல் ஆகியவை குறித்த கூடுதல் தகவல்கள் www.incometax.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன.



