60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக இந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி மக்களவையில் புதிய வருமான வரி மசோதா 2025 ஐ மத்திய அரசு அறிமுகம் செய்தது.. இந்த நிலையில் இந்த புதிய மசோதாவை மத்திய அரசு இன்று முறையாக வாபஸ் பெற்றது.
திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா ஆகஸ்ட் 11-ம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்படும்.. பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. சட்டத்தின் பல பதிப்புகளால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்ப்பதற்கும், எம்.பிக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்மொழியப்பட்ட மாற்றங்களையும் பிரதிபலிக்கும் ஒற்றை, ஒருங்கிணைந்த வரைவைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கும் இந்த வாபஸ் பெறப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
புதிய வருமான வரி மசோதா இந்தியாவின் நேரடி வரி கட்டமைப்பை நவீனமயமாக்கும், இணக்கத்தை எளிதாக்கும் மற்றும் வரி நிர்வாகத்தில் பல நீண்டகால சிக்கல்களைத் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையில் இன்று என்ன நடந்தது?
பீகாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவை நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. சபை ஒத்திவைக்கப்படுவதற்கு சற்று முன்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முந்தைய ‘வருமான-வரி மசோதா, 2025’ ஐ திரும்பப் பெற்றார், தேர்வுக் குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்தது.
பிற்பகல் 3 மணிக்கு சபை கூடியதும், தலைவராக இருந்த கிருஷ்ண பிரசாத் தென்னட்டி, சீதாராமனை மசோதாவை வாபஸ் பெற அனுமதி கோருமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் மசோதாவை வாபஸ் பெற்றார்.
நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இதுகுறித்து பேசிய போது “ தனிநபர் மசோதாக்கள் எடுக்கப்படும்போது எதிர்க்கட்சிகள் நேரத்தை வீணடிப்பது துரதிர்ஷ்டவசமானது. விதிகளின் கீழ் அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்கத் தயாராக இருப்பதாக அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருவதால், அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறக்கூடாது.” என்று கூறினார்..