மத்திய அரசு, காப்பீட்டு பிரீமியங்களுக்கான ஜிஎஸ்டி வரியை தற்போதைய 18% இலிருந்து 5% அல்லது பூஜ்ஜியமாக்கும் முன்மொழிவை பரிசீலித்து வருகிறது. இது ஜிஎஸ்டி 2.0 மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இப்போது, காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமியம் கட்டும் போது 18% ஜிஎஸ்டி சேர்க்கப்படுகிறது.
உதாரணமாக, ரூ.10,000 பிரீமியம் செலுத்தும் ஒருவர், ஜிஎஸ்டி காரணமாக கூடுதலாக ரூ.1,800 செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த வரி 5% ஆகக் குறைக்கப்பட்டால், அந்தச் சுமை வெறும் ரூ.500 ஆகும். இதனால் காப்பீடு வைத்திருப்போருக்கு நேரடியான நிவாரணம் கிடைக்கும்.
புதிய வரி முறை 5% மற்றும் 18% என்ற இரண்டு முக்கிய வரிகளைக் கொண்டிருக்கும். மேலும் ஆடம்பரப் பொருட்கள் மற்றும் மது, புகையிலை போன்ற பொருட்களுக்கு 0% வரி விதிக்கப்பட உள்ளது. உணவு, மருந்துகள், மருத்துவ சாதனங்கள், எழுதுபொருட்கள், கல்விப் பொருட்கள் மற்றும் பல் துலக்கும் பேஸ்ட், ஹேர் ஆயில் போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் தொடர்ந்து வரி விலக்குடன் அல்லது 5% வரியுடன் இருக்கும். தொலைக்காட்சிகள், ஏர் கண்டிஷனர்கள், ஃபிரிட்ஜ் போன்றவை 18% வரியுடன் இருக்கும். வைரங்கள், நகைகள் போன்ற துறைகளுக்கு ஏற்கனவே உள்ள 0.25% மற்றும் 3% வரிகள் தொடரும்.
ஆட்டோமொபைல் துறை: தற்போது அனைத்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கும் 28% ஜிஎஸ்டி உள்ளது. அதனுடன் 1% முதல் 22% வரை இழப்பீட்டு செஸ் விதிக்கப்படுகிறது. இதனால், மொத்த வரி 50% வரை உயரும். எனினும், மின்சார வாகனங்களுக்கு வெறும் 5% ஜிஎஸ்டி மட்டுமே உள்ளது.
இருசக்கர வாகனங்களில் 350 சிசி-க்கு மேல் உள்ள மாடல்களுக்கு மட்டும் 3% செஸ் உள்ளது. ஜிஎஸ்டி 2.0 அமல்பட்டால், 28% வரி நீக்கப்பட்டு 18% ஆக குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை குறையும். இது ஆட்டோமொபைல் சந்தைக்கு புத்துயிர் ஊட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.