டெல்லியில் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பமாக தந்தையின் சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள முகுந்த்பூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், அசோக் விஹாரில் உள்ள லட்சுமி பாய் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம் போல் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரில் ஒருவர் திடீரென மாணவி மீது ஆசிட் ஊற்றிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்பட்டது. இதையடுத்து, படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆசிட் வீசிய நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் விசாரணையில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி, தன்னை ஜித்தேந்தர் என்பவர் ஒருதலைப்படசமாக காதலித்ததாகவும், அவரிடம் சரிவர பேசாததால் ஆசிட் வீசியதாகவும் கூறினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இளம்பெண் தனது தந்தையின் பேச்சை கேட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
அதாவது இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த மாணவியின் தந்தை அகில், கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது மகளுக்கு ஆசிட் வீச்சில் காயம் அடைந்ததாக கூறப்பட்டதில் உண்மையில்லை. கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை தனது மகளே எடுத்து சென்று, கையில் ஊற்றிக்கொண்டு நாடகமாடினார் என்று கூறியுள்ளார். ஏனெனில், ஆசிட் வீசியதாக முதலில் குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்தர் மனைவி, தனக்கு எதிராக துன்புறுத்தல் வழக்கு கொடுத்ததால் அவரை பழிவாங்குவதற்கான எனது அறிவுறுத்தலின் பேரில், இவ்வாறு தனது மகள் நடந்து கொண்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அகில் மற்றும் அவரது மகளுக்கு எதிராக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



