தமிழகத்தை உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேரை விடுதலை செய்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2015-ம் ஆண்டு மே மாதம் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் மாயமானார். இந்த வழக்கில் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்ற ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ஷமீல்அகமது (26) விசாரணை இடையே உடல்நலம் பாதித்து மரணமடைந்தார்.
இந்த மரணம் ஆம்பூரில் பெரும் போராட்டத்தையும் கலவரத்தையும் தூண்டியது. 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வெடித்த கலவரத்தில் 15 பெண் போலீசார் உட்பட 91 பேர் காயம் அடைந்தனர். 30 அரசு, தனியார் பஸ்கள் மற்றும் பல வாகனங்கள் சேதம் அடைந்தது. 7 போலீஸ் வாகனங்கள் நொறுக்கப்பட்டது. 4 மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
தமிழகத்தை அதிரவைத்த இந்தக் கலவரத்தில் 191 பேருக்கு எதிராக 12 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், திருப்பத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மீனாகுமாரி இன்று தீர்ப்பளித்தார்.
7 கட்ட வழக்குகளில் 6 கட்ட வழக்குகளில் தொடர்புடைய 161 பேரை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டது. 1-ம் பிரிவில் – 26 பேர், 2-ம் பிரிவில் – 35 பேர், 3-ம் பிரிவில் – 34 பேர் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. அஸ்லாம் பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read more: சட்டவிரோத கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி உயிரிழப்பு.. திருவள்ளூரில் அதிர்ச்சி..!!