உலகளவில், மூன்றில் ஒரு பெண் தன் கணவர் அல்லது மற்றவர்களால் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் சர்வதேச தினம் நவ.25ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், 168 நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், உலக சுகாதார அமைப்பு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. ஐ.நா.,வின் பல்வேறு அமைப்புகள் உதவியுடன் இது தொடர்பாக விரிவான ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000ம் ஆண்டில் இருந்து, 2023ம் ஆண்டில் பதிவான வழக்குகள், குற்றங்கள் அடிப்படையில், இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அதில், உலகளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக, 2000ம் ஆண்டில் இருந்த நிலைமையே, தற்போதும் தொடர்கிறது. இந்த வன்முறைகளைத் தடுப்பதில், மிக மிகக் குறைந்த அளவிலேயே முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில், உலகளவில், 84 கோடி பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது தங்கள் கணவர்களால் அல்லது வெளியாட்களால் உடல்ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அதாவது, மூன்றில் ஒரு பெண், இதுபோன்ற சூழ்நிலையை சந்தித்துள்ளார். வன்கொடுமைகளை குறைப்பதில் ஆண்டுக்கு வெறும் 0.2 சதவீதம் மட்டுமே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ,” என்று WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார். “.
கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும், 15 வயதுக்கு மேற்பட்ட, 31.6 கோடி பெண்கள் அதாவது 11 சதவீத பெண்கள், தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களால் உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் வன்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
பாதுகாப்பின்மை வெளியாட்களால் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான பெண்கள் 26.3 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், களங்கம், பயம் மற்றும் போதிய சட்ட பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங் களினால் உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கும்.
இந்த வன்முறைகள், உடல் ரீதியிலான காயம் மட்டுமின்றி, பெண்களுக்கு நீண்டகால கடுமையான சுகாதார பிரச்னையையும் ஏற்படுத்துகிறது. மனசோர்வு, பதற்றம், துாக்கமின்மை, மன அழுத்தம், தற்கொலை முயற்சி உள்ளிட்டவற்றுக்கு பெண்கள் அதிகம் ஆளாகின்றனர். இது, பாலியல் நோய் தொற்று ஏற்பட்டு, ஆண்களும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சமூக, பொருளாதார பாதிப்புகளையும் உருவாக்குகிறது.
உலகளவில் தென் கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைத் தவிர்த்த ஓசியானா பிராந்தியங்களில் உள்ள பெண்கள் மிக அதிக அளவில் வன்கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள பெண்கள் 37 சதவீதம் பேர், தங்கள் வாழ்நாளில் மிகவும் அறிமுகமானவர்களால் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.


