திருவள்ளூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி கருக்கலைப்பு சிகிச்சை பின்பு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளும், உறவினரான 17 வயது சிறுவனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு சென்றனர். சிறுமியை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து, பொதட்டூர்பேட்டை போலீசார் சிறுவனுக்கு எதிராக போக்சோ வழக்கில் விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர், சிறுவனின் வீட்டார் இருவரையும் கண்டுபிடித்தபோது, சிறுமி ஏற்கனவே 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆந்திர மாநிலம் பண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளனர். கருக்கலைப்புக்குப் பின் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு நிலை மோசமடைந்ததால் அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
14 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அவர், பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் வயலட் கனி, ஹரிபாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிறுவனையும் அவரது பெற்றோரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
Read more: 15 பேர் பலி.. சட்டவிரோத கட்டடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்..!!