தேர்தல் ஆணையம் வாக்குகளை திருடுவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டிய நிலையில், ஆணையம் இதற்கு பதிலளித்துள்ளது..
எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையம் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.. இந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி ” இந்திய தேர்தல் ஆணையம் மிகப்பெரிய வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது.. தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதற்கான வெளிப்படையான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மிக முக்கியமாக, தேர்தல் ஆணையத்தில் யார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும், நாங்கள் உங்களை விடமாட்டோம்,” என்று தெரிவித்தார்.
நபர்களின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், ராகுல் காந்தி ஆணையத்திற்குள் இருப்பவர்களை எச்சரித்து, “நீங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறீர்கள், இது தேசத்துரோகத்திற்குக் குறைவில்லை. நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் ஓய்வு பெற்றிருந்தாலும் கூட, உங்களை நாங்கள் கண்டுபிடிப்போம்” என்று எச்சரித்தார்..
மத்தியப் பிரதேசம் மற்றும் மக்களவைத் தேர்தல்களின் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் சந்தேகம் அதிகரித்ததாகவும் ராகுல் காந்தி கூறினார். மேலும் “ மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகுதான் அந்த சந்தேகங்கள் ஆழமடைந்தன.. குறிப்பாக 1 கோடி புதிய வாக்காளர்கள் திடீரென இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட போது சந்தேகம் வலுவடைந்தது. அப்போதுதான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது என்பதை உணர்ந்தோம். எனவே, நாங்கள் 6 மாத காலம் தனிப்பட்ட விசாரணையைத் தொடங்கினோம். எங்கள் விசாரணையில் அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.. அது வெடிக்கும் போது ஓடி ஒளிந்து கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு மறைக்க இடமிருக்காது” என்றும் கூறினார்.
இந்த நிலையில் ராகுல்காந்தியின் கருத்துகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்துள்ளது.. “தேர்தல் ஆணையம் தினசரி அடிப்படையில் கூறப்படும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை புறக்கணிக்கிறது, மேலும் தினமும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும், அனைத்து தேர்தல் அதிகாரிகளும் பாரபட்சமின்றியும் வெளிப்படைத்தன்மையுடனும் பணியாற்றும் அதே வேளையில் இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளைப் புறக்கணிக்குமாறு கேட்டுக்கொள்கிறது” என்று தெரிவித்துள்ளது..
தேர்தல் ஆணையம் தற்போது பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை (SIR) மேற்கொண்டு வந்தது.. எனினும் இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று இந்தியா கூட்டணி கண்டித்து வருகிறது.. சிறப்பு தீவிர திருத்த பணி நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் நடந்து வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் பீகார் SIR குறித்து சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில், பீகாரில் நடைபெற்று வரும் பயிற்சிக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தங்கள் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு செய்தனர்.
Read More : சம்பளம் ரூ.15,000.. ஆனா கோடிக்கணக்கில் சொத்து.. 24 வீடுகள்.. அரசு ஊழியரின் மெகா ஊழல் அம்பலம்..