திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (25). பகுதிநேர வேலைகளுக்குச் சென்று வந்த இவர், சமூக வலைதளங்களில் தன்னை ஒரு கல்லூரி மாணவர் போல காட்டிக்கொண்டு, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது பதிவுகளால் ஈர்க்கப்பட்ட சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், ஜெயசீலனுடன் நட்பாகப் பழகத் தொடங்கினார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர, இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் உரையாடுவதுடன், தங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நாட்கள் செல்ல செல்ல ஜெயசீலனின் உண்மை முகமும், அவரது நடவடிக்கைகளில் இருந்த மாற்றங்களும் அந்த மாணவிக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அவரிடமிருந்து விலக முடிவு செய்து காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், காதலியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத ஜெயசீலன், மீண்டும் காதலிக்குமாறு மாணவியை வற்புறுத்தி மிரட்ட தொடங்கினார். மாணவி பிடிவாதமாக மறுக்கவே, காதலிக்கும் காலத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்களை பயன்படுத்திப் பழிவாங்க திட்டம் தீட்டினார்.
மாணவியின் புகைப்படங்களை மார்பிங் செய்து, ஆபாசமான முறையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஜெயசீலன் தனது வக்கிர புத்தியை காட்டினார். இதனைப் பார்த்து நிலைகுலைந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திண்டுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயசீலனை சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை தரப்பில் ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் பழகும்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் தங்களின் சுயவிவரங்கள் மற்றும் அந்தரங்கப் புகைப்படங்களைப் பகிர்வது பிற்காலத்தில் இது போன்ற விபரீதங்களுக்கு வழிவகுக்கும்” எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Read More : மாதம் ரூ.1,25,000 சம்பளம்..!! கொட்டிக் கிடக்கும் ஆசிரியர் காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!



