பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை சுட்டுவீழ்த்தி, வீரச் சக்ரா விருது பெற்ற இந்திய விமானப்படையின் முன்னாள் குரூப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமான், கோவாவை தளமாகக் கொண்டு இயங்கும் FLY91 என்ற தனியார் பிராந்திய விமான நிறுவனத்தில் பைலட்டாக இணைந்துள்ளார்.
அபிநந்தன் வர்த்தமான் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் இந்திய விமானப்படை சேவையிலிருந்து ஓய்வுபெற்று, ஆகஸ்ட் மாதத்தில் ‘ஃப்ளை91’ நிறுவனத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஃப்ளை91 நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்கள் தொடர்பான தகவல்களைப் பகிர முடியாது எனப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
கோவா மற்றும் ஹைதராபாத்தை தளமாக கொண்டு மார்ச் 2024 முதல் இயங்கி வரும் இந்த நிறுவனம், சிறிய நகரங்களை இணைக்கும் வகையில் 6 ஏடிஆர் 72-600 ரக விமானங்களை இயக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று காஷ்மீரின் புல்வாமாவில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக, பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியிலிருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
மறுநாள் (பிப்ரவரி 27, 2019) இந்திய எல்லைக்குள் அத்துமீற முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டியடிக்கும் முயற்சியில், அப்போதைய விங் கமாண்டரான அபிநந்தன், தனது பழைய ‘மிக்-21 பைசன்’ (MiG-21 Bison) விமானத்தின் மூலம் அதிநவீன ‘எஃப்-16’ விமானத்தைச் சுட்டுவீழ்த்தி ராணுவ விமானப் போக்குவரத்து வரலாற்றில் சாதனை படைத்தார்.
இந்த மோதலின் போது அவரது மிக்-21 விமானம் ஏவுகணையால் தாக்கப்படவே, அவர் பேராசூட் மூலம் குதித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் தரையிறங்கினார். அங்கு சுமார் 60 மணி நேரம் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் சிறைபிடிக்கப்பட்டார்.
இந்தியாவின் கடுமையான தூதரக அழுத்தம் காரணமாக, மார்ச் 1, 2019 அன்று அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அபிநந்தனின் இணையற்ற தைரியம் மற்றும் தாய்நாட்டின் மீதான கடமை உணர்வை பாராட்டி, 2021-ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது உயரிய போர் விருதான ‘வீரச் சக்ரா’ வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் அவர் ‘குரூப் கேப்டன்’ ஆகப் பதவி உயர்வு பெற்றார்.
இந்திய விமானப்படையின் மிக முக்கியமான மற்றும் புகழ்பெற்ற முகங்களில் ஒன்றான அபினந்தன் வர்த்தமானின் இந்த புதிய சிவில் விமானப் போக்குவரத்துப் பயணம் இந்திய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.



