ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த திமுக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏழை பெண்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு, மூவலுார் ராமாமிர்தம் நினைவு திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மணமகளுக்கு, 25,000 ரூபாய் நிதியுதவியும், எட்டு கிராம் தங்க நாணயமும் வழங்கியது. பட்டம் பெற்ற மணமகளுக்கு, 50,000 ரூபாயும், எட்டு கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.
ஆனால், இது கடந்த 2022ம் ஆண்டு பட்ஜெட்டில் மாற்றி அமைக்கப்பட்டது.. “தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 – 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இப்படியான நிலையில் பெண்களுக்கான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் செயல்படுத்த உள்ளது.
தற்போது தங்கத்தின் விலை கிராமுக்கு 10,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்நிலையில் செயல்பாட்டில் உள்ள 4 திருமண நிதி உதவி திட்டங்களில் 22 கேரட் ஒரு சவரன் தங்கம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் திருமண உதவித் திட்டத்துக்காக ரூ.45 கோடிக்கு 5460 தங்க நாணயங்கள் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.


