திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டை அடுத்த, இராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டன்
ராமச்சந்திரன், ஆர்த்தி இருவரும் வேறு வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த பகுதிக்கு பால் கறக்கும் வேலைக்கு மருமகன் ராமச்சந்திரன் சென்றுள்ளார்.
அப்போது, அவரை வழிமறித்த மாமனார் சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து மருமகன் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மருமகன், ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நிலக்கோட்டை காவல்துறையினர், ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நிலக்கோட்டை காவல்துறையினர், மாமனார் சந்திரனை கைது செய்தனர். இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம்? அவர்களையும் கைது செய்ய வேண்டும் என கூறி, கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் மனைவி ஆர்த்தி மற்றும் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இராமநாயக்கன்பட்டியில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, அவரது உடலை பெற்று அடக்கம் செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சந்திரன் என்பவரது மனைவி அன்புச்செல்வி (39) அவர்களது மகன் ரிவின் (23) ஆகியோரை, நிலக்கோட்டை தனி படை காவல்துறையினர் கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.