தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக மாறிவரும் இந்த சூழலில் தங்கக் கடத்தலும், நகை கொள்ளைகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி, அம்மாப்பட்டினம் பகுதியில் 110 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் கனகராஜ், மங்களூரில் விசைப்படகு டிரைவராக பணியாற்றி வருகிறார். அவரது மகள் தீபிகாவுக்கு, தாமரைக்குளத்தைச் சேர்ந்த சீனிவாசனுடன் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. மங்களூரில் கனகராஜ் தங்கியிருப்பதால், தாமரைக்குளத்தில் உள்ள மகள் வீட்டில் கனகராஜ் மனைவி அடிக்கடி சென்று தங்குவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று முன் தினம் மகள் வீட்டில் தங்கியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க வேலியை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். வீட்டில் பீரோவிலிருந்த 110 பவுன் தங்க நகைகள், 45 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர். வீடு திரும்பிய போது வேலி, கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது நகை பணம் காணவில்லை.. உடனே உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர். இதற்கு பிறகு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.