பாலியல் பலாத்கார வழக்கில் அந்தமான் நிக்கோபார் தீவு மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திர நரேனை சஸ்பெண்ட் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த ஆண்டு மார்ச் முதல் கடந்த ஜூலை மாதம் வரை தலைமைச் செயலராக இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திரா நரேன். அதன் பின்னர் அவர் டெல்லியில் உள்ள நிதி கழகத்தில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்தார். அவர் தலைமைச் செயலராக இருந்தபோது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 21 வயது கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அந்தமான் ஆபர்டீன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அந்த புகாரில், கல்லூரி மாணவியாக இருந்த நான் வேலை தேடி சென்றதாகவும், அப்போது அந்தமான் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆர்.எல் ரிஷியின் அறிமுகம் தனக்கு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தன்னை ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தலைமைச் செயலராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திரன் நரேனிடம் அவர் அழைத்துச் சென்றதாகவும், அப்போது ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் வைத்து இருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதன் பின்னர் மீண்டும் மே மாதம் அவர்கள் இருவரும் தன்னை அழைத்து பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என அவர்கள் தன்னை மிரட்டியதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகாரை அடுத்து அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மூத்த அதிகாரி ஜிதேந்திர நரேன் மற்றும் ஆர்.எல் ரிஷி மீது அந்தமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த குழு விசாரணையை தொடங்கியது. இந்நிலையில்தான் பாலியல் வழக்குக்கு உள்ளான ஐஏஸ் அதிகாரி ஜிதேந்திர நரேன் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.