19 வயதான த்ரவ்யா ஷா என்ற இளைஞன் தற்போது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) உள்ளார். இந்த நிறுவனம் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு எனப்படும் உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப மையத்தில் பெரிய நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் பெயர் “சூப்பர்மெமரி (Supermemory)”. இந்த நிறுவனம் சமீபத்தில் 3 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 25 கோடி ரூபாய்) அளவுக்கு நிதி உதவியைப் பெற்றுள்ளது.
இதில் முக்கியமானது இந்த நிறுவனத்துக்கு கூகிளின் AI தலைவர் ஜெஃப் டீன் (Jeff Dean) மற்றும் டீப் மைண்ட் நிறுவனத்தின் (DeepMind) லோகன் கில்பாட்ரிக் (Logan Kilpatrick) போன்ற பெரிய தொழில்நுட்ப நிபுணர்கள் நேரடியாக ஆதரவு வழங்கியுள்ளனர்.
த்ரவ்யா ஷாவின் ஸ்டார்ட்அப் சூப்பர்மெமரி: நீண்ட நாட்களாக செயற்கை நுண்ணறிவு உலகில் ஒரு பெரிய பிரச்சனை நிலவுகிறது. அதாவது, பெரிய மொழி மாதிரிகள் (LLMs) நினைவாற்றல் குறைவாக இருப்பது. இவை மிகவும் புத்திசாலியான அமைப்புகள் என்றாலும், நீண்ட காலத்திற்கு பழைய தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. இந்த சிக்கலை சரிசெய்யும் முயற்சியாக த்ரவ்யா ஷா உருவாக்கிய ஸ்டார்ட்அப் தான் “சூப்பர்மெமரி (Supermemory)”.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், AI பயன்பாடுகள் பயனர்கள் முன்னர் சொன்ன தகவல்களையும், முந்தைய அமர்வுகளில் நடந்த உரையாடல்களையும் நினைவில் வைத்துக்கொண்டு, பின்னர் அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியும். இது வெற்றியடைந்தால், டிஜிட்டல் உலகில் AI அமைப்புகள் செயல்படும் விதத்தையும், பயனர்கள் பெறும் அனுபவத்தையும் முற்றிலும் மாற்றக்கூடிய ஆற்றல் சூப்பர்மெமரிக்குக் கிடைக்கும்.
த்ரவ்யா ஷாவின் பயணம்: த்ரவ்யா ஷா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே தொழில்நுட்பம், செயலிகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.அவரது நண்பர்கள் IIT போன்ற கடினமான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், த்ரவ்யா முழுமையாக கோடிங் (Coding) உலகில் மூழ்கி இருந்தார். அந்த காலத்திலேயே அவர் ட்விட்டர் ஆட்டோமேஷன் கருவி ஒன்றை உருவாக்கினார்; பின்னர் அதை Hypfury என்ற தளத்திற்கு விற்றார்.
அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பிறகு, த்ரவ்யா தன்னைத்தானே சவாலுக்கு உட்படுத்திக் கொண்டார். “40 வாரங்களில் 40 புதிய திட்டங்கள்” என்ற இலக்குடன். ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தொழில்நுட்ப முயற்சியை உருவாக்க வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றினார். இந்த சோதனை முயற்சிதான் பின்னர் “சூப்பர்மெமரி (Supermemory)” என்ற AI நிறுவனத்தின் ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. அதன் ஆரம்ப வடிவம் “Any Context” என்ற பெயரில், ட்விட்டர் புக்மார்க்குகளுடன் தொடர்பு கொள்ள வடிவமைக்கப்பட்ட ஒரு சாட்பாட் ஆக இருந்தது.
த்ரவ்யா ஷாவின் பயணம் இங்கேயே நிற்கவில்லை. ட்விட்டர் ஆட்டோமேஷன் கருவி உருவாக்கியதற்குப் பிறகு, அவர் Hypfury நிறுவனத்தில் Full-Stack Developer (முழு மென்பொருள் வடிவமைப்பாளர்) ஆக பணியாற்றினார். பின்னர் அவர் Mem0 (Y Combinator S24) என்ற ஸ்டார்ட்அப்பில் AI பொறியாளராக (AI Engineer) பணியில் சேர்ந்தார். இங்கே பெற்ற அனுபவம், செயற்கை நுண்ணறிவு துறையில் அவரது திறமையை மேலும் மேம்படுத்தியது.
2024 மே மாதத்தில் த்ரவ்யா உலகப் புகழ்பெற்ற Cloudflare நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு அவர் Developer Relations Lead என்ற பதவியைப் பெற்றார். இதன் மூலம் மென்பொருள் உருவாக்குநர்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான தொழில்நுட்ப உறவுகளை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு கிடைத்தது.
Cloudflare நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில், த்ரவ்யா AI உள்கட்டமைப்பு (Infrastructure) மற்றும் தரவு அமைப்புகள் (Data Systems) குறித்து ஆழமான புரிதலைப் பெற்றார். அந்த நிறுவனத்தின் CTO டான் க்நெக்ட் (Dan Knecht) போன்ற மூத்த தொழில்நுட்ப வல்லுநர்களால் ஊக்கமளிக்கப்பட்ட அவர், தன்னுடைய கனவை நனவாக்க முடிவு செய்தார். அதன்பிறகு தனது யோசனையை ஒரு பெரிய AI ஸ்டார்ட்அப்பாக மாற்றி உலகத்திற்கு காட்டினார்.