சொத்துப் பத்திரம் பதிவு செய்த பிறகு, அந்த ஆவணத்தில் பெயர், முகவரி, விலை, சர்வே எண் உள்ளிட்ட விவரங்களில் தவறு இருந்தால், அந்த பிழைகள் பின்னாளில் பெரிய சட்ட பிரச்சனைகளாக மாறக்கூடும். இவ்வாறு பிழை ஏற்பட்டால், அதை திருத்தும் வழிமுறைகள் குறித்து இப்போது விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
பொதுவாக பத்திரத்தில் உள்ள பிழைகளை திருத்த, “பிழை திருத்தல் பத்திரம்” எனப்படும் Rectification Deed பதிவு செய்யப்படுகிறது. இது, உரிமையாளராக இருந்த விற்பனையாளர் மூலமாகவே செய்யப்பட்டிருக்க வேண்டும். அதே விற்பனையாளர், அந்த பிழையை ஒப்புக்கொண்டு, புதிய ஆவணத்தில் சரியாக எழுதித் தர வேண்டும்.
பெயர், தந்தை பெயர், முகவரி, மனையின் அளவு, விலை உள்ளிட்ட விவரங்களில் ஒரு எழுத்துப் பிழையும் இருந்தாலும், வங்கி கடனுக்கும், பட்டா பெயர் மாற்றத்துக்கும் இடையூறாக அமையலாம். அதனாலேயே பத்திரம் பதிவு செய்வதற்குமுன், எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை சரிபார்த்துவிட்டுத்தான் கையெழுத்திட வேண்டும் என வக்கீல்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த பிழைகளை திருத்தும்போது, ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மார்க் ஷீட் போன்ற ஆவணங்களில் உள்ள சரியான பெயரையும் இனிஷியலையும் எடுத்துக்காட்டி, உரிய நிரூபணங்களுடன் திருத்த வேண்டியது அவசியமாகும். சில பிழைகளுக்கு அரசு விதித்த குறைந்தபட்ச கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும். சில சமயங்களில், சர்வே எண் தவறாக இருந்தாலோ, மனையின் எல்லைகள் விலங்கவில்லையெனில், அந்த பிழை திருத்தத்திற்கு கூடுதல் கட்டணம் மற்றும் உரிய காரணம் தேவைப்படும்.
சொத்துப் பதிவு என்பது ஒரே ஒரு தவறும் அனுமதிக்கக் கூடாத சட்ட செயல்முறை. எனவே, பத்திரத்தில் பிழை இருப்பதை கண்டவுடன், சட்டப்படி திருத்துவதற்கான நடவடிக்கையை உடனே மேற்கொள்வது அவசியம் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
Read more: TNPSC குரூப்-1 தேர்வு: திமுக குறித்த கேள்வியால் வெடித்தது சர்ச்சை..!! என்ன விஷயம் தெரியுமா..?