விழுப்புரம் மாவட்டம் வானூரில் பகுதியில் அமைந்துள்ள சனீஸ்வரன் கோயில், உலகிலேயே பெரிய சனீஸ்வரன் ஆலயமாக பெருமை பெற்றுள்ளது. இங்கு 27 அடி உயரத்தில் விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் காட்சியளிக்கிறார். கோயிலுக்குள் செல்லும் முன்பே பக்தர்களை ஈர்க்கும் விதமாக, 80 அடி உயர பிரம்மாண்ட மகா கும்பகோபுரம் மற்றும் 54 அடி உயர மகா கணபதி சிலை தரிசனம் செய்யலாம்.
இங்குள்ள சனீஸ்வரர் சிலை நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறது. மேலே உள்ள கரங்களில் வில் மற்றும் அம்பு காணப்படும்; கீழே உள்ள கரங்களில் முத்திரைகள் வடிவில் அருள் சின்னங்கள் உள்ளது. வழக்கமாக சனீஸ்வரரின் வாகனம் காக்கை என்றாலும், இங்குள்ள சனீஸ்வரன் கழுகு வாகனத்தில் காட்சியளிப்பது இக்கோயிலின் முக்கிய தனிச்சிறப்பாகும்.
சனிப்பெயர்ச்சி நாளன்று இக்கோயிலில் 80 அடி உயர கும்பகோபுரத்தின் மேல் 8 ஆயிரம் லிட்டர் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுவது பாரம்பரிய வழக்கமாக நடைபெறுகிறது. இது பக்தர்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சனி கிரகத்தின் பாதிப்பால் துன்பப்படுபவர்கள் இத்தலத்திற்குச் சென்று வழிபட்டால் வாஸ்து தோஷம் நீங்கும், திருமணத் தடைகள் நீங்கும், குடும்ப பிரச்சனைகள் தீரும் என நம்பப்படுகிறது.
இங்குள்ள கோசாலையில் கோதானம் மற்றும் கோபூஜை செய்தால் பக்தர்கள் கோமாதாவின் அருளையும் பெறலாம். குறிப்பாக சனிப்பெயர்ச்சியின் போது இங்கு தரிசனம் செய்வது மிகுந்த புண்ணிய பலன்களை அளிக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.



