வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு கேரளாவில் முன்னதாகவே பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. 8 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். இதுதவிர தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவுகிறது.
இதன் காரணங்களால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை நீடிக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும் அந்தவகையில், இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாளையும், நாளை மறுநாளும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.