உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பென்தா கிராமத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஜெகந்நாதர் ஆலயத்தில், பருவமழைக்கு முன்பாக கோவில் மேற்கூரையில் இருந்து திடீரென நீர் சொட்டத் தொடங்கும் என கூறப்படுகிறது. அந்த நீர் சொட்ட ஆரம்பித்த சரியாக 7 நாட்களுக்குள் மழைக்காலம் தொடங்கிவிடும் என்பது அப்பகுதி மக்களின் உறுதியான நம்பிக்கை.
இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, உள்ளூர் விவசாயிகள் முன்னதாகவே உழவுப்பணிகளை ஆரம்பித்து விடுகிறார்கள். மேலும், கோவிலுக்குள் நீர் சொட்டும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்பதால், அந்த நாட்களில் விழா போலவே மக்கள் கொண்டாடுகின்றனர்.
கோவிலைச் சுற்றி மலைகளோ, பெரிய மரங்களோ இல்லாத நிலையில், நீர் எங்கிருந்து வருகிறது? ஏன் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் சொட்டுகிறது? என்பதற்கு இதுவரை எந்த விஞ்ஞானிகளாலும் தெளிவான விளக்கம் அளிக்க முடியவில்லை. பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், காரணம் கண்டறியப்படவில்லை.
சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில், முற்றிலும் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்டுள்ளது. 14 அடி தடிமன் கொண்ட சுற்றுச் சுவர், 100 அடி ஆழமுள்ள கிணறு,
கோவில் உச்சியில் உள்ள வட்ட வடிவ உலோக அமைப்பு உள்ளது. இருப்பினும் எந்த உலோக கலவை என இன்னும் மர்மமாக உள்ளது.
கோவிலில், மூலவர் ஜெகந்நாதர் (6–7 அடி உயர கருங்கல் சிலை), சுபத்ரா தேவி, பாலபத்ரா, மகாவிஷ்ணுவின் 24 அவதாரங்கள், தசாவதாரச் சிற்பங்கள், அரிய பஞ்சமுக விநாயகர் சிலை போன்ற அபூர்வ அம்சங்கள் உள்ளன. இந்த கோவில் யாரால் கட்டப்பட்டது? எப்போது கட்டப்பட்டது? என்பது குறித்தும் தெளிவான வரலாற்று ஆதாரம் இல்லை. 11-ஆம் நூற்றாண்டில் புனரமைப்பு நடந்திருக்கலாம் என மட்டுமே கூறப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும், இந்த மழை அறிவிக்கும் அதிசயத்தை நேரில் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இன்றைய நவீன விஞ்ஞானத்திற்கும் சவால் விடும் இந்த நிகழ்வு, இன்னும் ஒரு விடை தெரியாத இந்திய மர்மமாகவே உள்ளது.
Read more: கார்த்தியின் வா வாத்தியார் படத்திற்கு தொடரும் சிக்கல்.. தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!



