உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூன் நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தப்கேஷ்வர் மகாதேவ் கோவில். தன்சு ஆற்றின் (Tons River) கரையில், இயற்கையான குகையின் உள்ளே அமைந்துள்ள இந்த சிவாலயம், டேராடூனின் மிகப் பழமையானதும், புகழ்பெற்றதுமான புனித தலமாகும்.
மலைகளால் சூழப்பட்ட இந்த கோவில், அதன் இயற்கை அழகாலும் ஆன்மிக சூழலாலும் சுற்றுலாப் பயணிகளையும் பக்தர்களையும் ஈர்க்கிறது. கோவிலுக்குச் செல்ல சிறிது தூரம் காடு வழியாக நடக்க வேண்டியிருக்கும். இதுவே அந்த இடத்தின் அமைதியையும் ஆன்மீக மௌனத்தையும் அதிகரிக்கிறது.
6000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இந்த கோவில், ஒரு சிறப்பான அதிசயத்தைக் கொண்டுள்ளது: கோவிலின் கூரையிலிருந்து நீர்த்துளிகள் தொடர்ந்து சிவலிங்கத்தின் மீது சொட்டிக் கொண்டே இருக்கும். இதனால் தான் இங்கு வழிபடப்படும் சிவபெருமானுக்கு “தப்கேஷ்வர்” என்ற பெயர் வந்தது. ‘தப்கே’ என்பது ஹிந்தியில் “சொட்டுதல்” என்று பொருள்.
இங்குள்ள சிவலிங்கம் தானாக உருவானது என நம்பப்படுகிறது. கோவிலின் அருகில் ஒரு பெரிய அனுமன் சிலையும் உள்ளது. இதே இடத்தில் பாண்டவர்களின் குருவான துரோணாச்சாரியர் தவம் செய்ததாக வரலாறு கூறுகிறது. அவர் பெயரால் அருகிலுள்ள குகை “துரோண குகை” என்றும் அழைக்கப்படுகிறது. துரோணாச்சாரியர் இங்கு சிவனைத் துதி செய்து “தனுர் வித்யா” எனப்படும் வில்-அம்பு கல்வியில் சிறந்த ஞானம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் இந்த கோவில் சித்தி பீடம் என்று பக்தர்கள் கருதுகின்றனர். இங்கு மா வைஷ்ணோ தேவி, விநாயகர், தத்தாத்ரேயர் போன்ற தெய்வங்களுக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா தலமாகவும், ஆன்மீக யாத்திரை தலமாகவும் தப்கேஷ்வர் மகாதேவ் கோவில் மிகப் பிரபலமானது.
குறிப்பாக மகா சிவராத்திரி நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து ஈசனை தரிசிக்கிறார்கள். மலைகளால் சூழப்பட்ட இந்த புனித இடத்தின் முன்புறத்தில் கந்தக கலந்த நீர் ஊற்று ஓடுகிறது. அந்த நீரில் நீராடி, பாவங்கள் தீரும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் பிறகு சிவலிங்கத்தை வழிபடுகிறார்கள். இயற்கை, வரலாறு, ஆன்மிகம் ஆகிய மூன்றும் இணைந்திருக்கும் இந்த தப்கேஷ்வர் மகாதேவ் கோவில், டேராடூனில் செல்ல வேண்டிய முக்கிய தலங்களில் ஒன்றாகும்.
Read more: Flash : 2025-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!