தமிழ் மாதங்களில் 6வது மாதமாக மலரும் புரட்டாசி, ஸ்ரீமகாவிஷ்ணுவின் பேரருளைப் பெறுவதற்குரிய உன்னதமான பக்தி மாதமாகக் கருதப்படுகிறது. சூரிய பகவான், புதனின் ஆட்சி வீடான கன்னி ராசியில் பிரவேசிக்கும் இம்மாதம் ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் உடலுக்கும் மனதுக்கும் புது உற்சாகத்தை வழங்கும் மாதமாகும்.
ஆண்டு முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரத வழிபாட்டை மேற்கொள்ள முடியாதவர்கள் கூட, புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதத்தைக் கடைப்பிடிப்பது வழக்கம். இதனாலேயே இம்மாதம் ‘விரத மாதம்’ எனப் போற்றப்படுகிறது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான திருப்பதி திருத்தலத்தில் உலகப் புகழ்பெற்ற வருடாந்திர ‘பிரம்மோற்சவம்’ புரட்டாசியில்தான் கோலாகலமாக நடைபெறுகிறது. பெருமாளுக்கு நேர்த்திக்கடன்கள், காணிக்கைகள் மற்றும் முடிகாணிக்கை செலுத்துவதற்கும் இம்மாதமே மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.
புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளைத் தவிர்த்து, சைவ உணவை மட்டுமே உட்கொள்வது நற்பலன்களைத் தரும். அது இயலாதவர்கள், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளிலாவது கண்டிப்பாக அசைவத்தைத் தவிர்த்து விரதம் கடைப்பிடிப்பது அவசியம்.
வீடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள்:
அதிகாலையிலேயே நீராடி, குடும்பத்தினர் அனைவரும் நெற்றியில் திருமண் (திருநாமம்) தரித்து நாராயணனை தியானிக்க வேண்டும்.
விரதம் இருப்பவர்கள் நாள் முழுவதும் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்வது சிறப்பானது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் கையில் உண்டியல் ஏந்தி, “வெங்கட்ரமணா… கோவிந்தா…” என முழங்கி வீடு வீடாகச் சென்று அரிசியும் காணிக்கையும் தானமாகப் பெறும் தொன்மையான மரபு இன்றும் தொடர்கிறது.
தானமாகப் பெற்ற அரிசியைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல், அறுசுவை உணவு, வடை மற்றும் பாயாசம் தயாரித்து எம்பெருமானுக்குப் படைத்து குடும்பத்துடன் பகிர்ந்து உண்பர்.
மாலையில் அருகில் உள்ள பெருமாள் அல்லது ஆஞ்சநேயர் சன்னதிக்குச் சென்று நெய்தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் பலன் தரும்.
புரட்டாசி சனி விரத பலன்கள்:
புத பகவான் தனது சொந்த வீடான கன்னியில் உச்சமடையும் காலமான புரட்டாசியில் விரதம் இருப்பதால், வருடம் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்ததற்கான முழுமையான பலனும் கிட்டும் என்பது ஐதீகம். மேலும், வாழ்க்கையில் நிலவி வரும் காரியத் தடைகள், கடன் மற்றும் பிணி சங்கடங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதியும் செல்வ வளமும் பெருகும். மேலும், முப்பெரும் தேவிகளைப் போற்றும் நவராத்திரி நாயகி வழிபாடும் இம்மாதத்தின் வளர்பிறையில்தான் தொடங்குகிறது என்பது இதன் தனிச்சிறப்பு.



