கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் லோகேந்திரன் (33). இவர் ஒரு பைனான்சியராகவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி ஜாய்மெட்டில்டா (27), அன்னூரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தின் கர்நாடக மாநிலக் கிளை அலுவலகத்தில், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவைச் சேர்ந்த நாகேஷ் (25) மேலாளராகப் பணியாற்றி வந்தார். ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததால், கடன் பெறுவோரின் வீடுகளை ஆய்வு செய்யும் பணி தொடர்பாக ஜாய்மெட்டில்டா – நாகேஷ் இருவரும் அடிக்கடி வீடியோ கால் மூலம் பேசத் தொடங்கினர். இந்த அறிமுகம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
நாகேஷ், தனது நண்பரின் காரை எடுத்துக் கொண்டு கர்நாடகாவில் இருந்து அடிக்கடி அன்னூர் வந்து ஜாய்மெட்டில்டாவைச் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இருவரும் தங்கும் விடுதியில் ஒன்றாக இருந்தபோது, ஜாய்மெட்டில்டாவின் கணவர் லோகேந்திரன் அவர்களை கையும் களவுமாகப் பிடித்து கண்டித்துள்ளார். இதுகுறித்து நிதி நிறுவனத்திடம் புகார் அளிக்கப்பட்டதால், இருவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி லோகேந்திரன் மதுரைக்குச் சென்றிருந்த நிலையில், ஜாய்மெட்டில்டா தனது கள்ளக்காதலன் நாகேஷை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதை வீட்டில் இருந்த லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாள் பார்த்து கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து, மயிலாத்தாள் முகத்தில் தலையணையால் அழுத்தி மூச்சுத் திணறடித்து கொலை செய்துள்ளனர். பின்னர், மயிலாத்தாள் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக நாடகமாடி ஜாய்மெட்டில்டா அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.
பாட்டியைக் கொன்ற பிறகு, கணவர் லோகேந்திரனையும் கொலை செய்ய ஜாய்மெட்டில்டா திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த 22-ஆம் தேதி நாகேஷை அன்னூருக்கு வரவழைத்தார். 23ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில், லோகேந்திரன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஜாய்மெட்டில்டா கதவைத் திறந்து நாகேஷை உள்ளே அனுமதித்தார். இருவரும் சேர்ந்து லோகேந்திரனைக் கொலை செய்ய முயன்றபோது, அதிர்ஷ்டவசமாக லோகேந்திரன் விழித்துக் கொண்டு தப்பிவிட்டார். உடனடியாக நாகேஷ் பின்வாசல் வழியாகத் தப்பித்து கர்நாடகாவுக்கு ஓடிவிட்டார்.
உயிர் தப்பிய லோகேந்திரன், அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சூழலில், ஜாய்மெட்டில்டாவைச் சந்திப்பதற்காக மீண்டும் கர்நாடகாவில் இருந்து காரில் கஞ்சப்பள்ளி பகுதிக்கு நாகேஷ் வந்துள்ளார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஜாய்மெட்டில்டாவுடன் சேர்ந்து பாட்டியை கொலை செய்ததும், கணவரைக் கொல்லத் திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, ஜாய்மெட்டில்டா மற்றும் நாகேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



