தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை மாநில உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. நாம் அன்றாடம் சுவைக்கும் தித்திப்பான உணவுப் பொருட்களில் ஒளிந்திருக்கும் ஒரு கசப்பான உண்மையை சமூக வலைத்தளப் பதிவு மூலம் உணவு பாதுகாப்புத் துறை வெளிப்படுத்தியுள்ளது. இது இனிப்புச் சுவை மீது அதீதப் பிரியம் கொண்டவர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் துறை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், “இனிப்பு பிரியர்களுக்கான ஒரு எச்சரிக்கை” என்ற தலைப்பில் ஒரு முக்கியப் பதிவை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பதிவில் “உங்களது உடலுக்கு சர்க்கரை (Sugar) எப்போது எதிரியாக மாறுகிறது என்று தெரியுமா? நீங்கள் ஒரு நாளைக்கு 25 கிராமுக்கு மேல் சர்க்கரையை உட்கொள்கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்கான ‘அலர்ட்'” எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஒரு தேக்கரண்டியில் சுமார் 4 கிராம் அளவுக்கு சர்க்கரை இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள உணவு பாதுகாப்புத் துறை, அதிக சர்க்கரை உட்கொள்வது சர்க்கரை நோய் (நீரிழிவு) மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது எனவும் எச்சரித்துள்ளது. “உங்கள் சர்க்கரை உட்கொள்ளலைக் கணக்குப் போட்டுப் பாருங்க. வெறும் சுவைக்காக உங்கள் ஆரோக்கியத்தை இழக்காதீங்க” என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த எச்சரிக்கை, இனிப்புப் பொருட்களை அளவோடு எடுத்துக்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவதன் அவசியத்தை அழுத்தமாக உணர்த்துகிறது.



