பள்ளி முடிந்ததும் ஆசிரியர்கள் வெளியே சென்ற நிலையில், மூடிய வகுப்பறை ஜன்னலில் 7 வயது மாணவனின் கழுத்து சிக்கிக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவம் பீகாரின் தாஜ்கஞ்ச் ஃபாசியா வார்டு எண் 45 இல் உள்ள கதிஹார் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்தது. 3-ம் வகுப்பில் படிக்கும் 7 வயது மாணவர் கௌரவ் குமார், மூடிய வகுப்பறையின் ஜன்னலில் சிக்கிக் கொண்டார்.
அவர் படிக்கும் பள்ளி வழக்கம் போல் மாலை 4 மணிக்கு பள்ளி மூடப்பட்டது. அனைத்து குழந்தைகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பள்ளியின் முதல்வர் ஆகியோர் பள்ளியின் அனைத்து வாயில்களையும் பூட்டிவிட்டு வெளியேறினர். ஆனால் கௌரவ் தனது வகுப்பறையில் தூங்கிக் கொண்டிருந்தது யாருக்கும் தெரியவில்லை..
மாணவன் விழித்தெழுந்தவுடன், வகுப்பறைக் கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே ஜன்னல் வழியாக வகுப்பறையை விட்டு வெளியேற முயன்ற போது சிறுவனின் கழுத்து அதில் சிக்கிக் கொண்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவன் அங்கேயே சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
மீட்புப் பணியில் ஈடுபட்ட கிராம மக்கள்
தற்செயலாக, பள்ளிக்கு அருகில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகள், கௌரவின் அழுகை சத்தம் கேட்டதும் பந்தை எடுக்க பள்ளி எல்லைக்குள் வந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள கிராம மக்களுக்குத் தெரிவித்தனர். பள்ளிக்கு அருகில் கூடியிருந்த சில கிராம மக்கள், பிரதான கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். நீண்ட நேர முயற்சிகளுக்குப் பிறகு உள்ளூர் மக்கள் குழந்தையை மீட்டனர்.. இந்த சம்பவம் பள்ளி அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.. மாணவர் தூங்கிக் கொண்டிருந்தபோது ஆசிரியர்களும் ஊழியர்களும் கவனிக்காமல் அவர்கள் வகுப்பறையை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது..
மாணவன் வகுப்பறையில் தூங்கிக்கொண்டிருந்தாலும், அதை வெளியே எடுத்து பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்புவது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்பு. ஆனால் மாணவனை கவனிக்காமல் பூட்டி சென்றதால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பெற்றோரும் பொதுமக்களும் குற்றம்சாட்டி உள்ளனர்..
Read More : அடிப்படை கண்ணியம் கூட இல்ல.. குப்பை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சடலம்.. அதிர்ச்சி வீடியோ..