சமையலறையின் அத்தியாவசியத் தேவையான தக்காளி, தற்போது ஏழைகளின் ஆப்பிள் என்ற நிலையிலிருந்து மாறி, விலையில் நிஜமான ஆப்பிளுக்கே சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக திருப்பூர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் தரமான தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய் வரை சில்லறை விற்பனையில் விற்கப்படுவதால், பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.
சந்தை நிலவரப்படி, சுமார் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 800 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை ஏலத்திற்கு போகிறது. கரும்பு, வாழை போன்ற நீண்ட காலப் பயிர்களுக்கு மாற்றாக, உடனடி வருவாய் தரும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினாலும், தற்போது நிலவும் விலை ஏற்றம் அவர்களுக்குப் பெரிய அளவில் லாபத்தை தரவில்லை என்பதே கள நிலவரமாக உள்ளது. இதற்கு பின்னணியில் பருவநிலை மாற்றமும், குறைந்து வரும் விளைச்சலும் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.
இது குறித்துக் கவலை தெரிவிக்கும் விவசாயிகள், “கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளதால், செடிகளில் பூக்கள் கருகி மகசூல் பாதியாக குறைந்துவிட்டது. வழக்கமாக இந்த நேரத்தில் அதிக வரத்து இருக்க வேண்டும், ஆனால், விளைச்சல் பாதிப்பால் சந்தைக்கு வரும் தக்காளியின் அளவு சரிந்துவிட்டது. இதனால் சந்தையில் விலை உயர்ந்தாலும், எங்களிடம் போதிய சரக்கு இல்லாததால் அந்த லாபம் எங்களை வந்து சேருவதில்லை” என வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்போது உடுமலை போன்ற பெரிய சந்தைகளுக்கு வெளியூர் வியாபாரிகளின் வருகை அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் தக்காளிக்கு ஒரே சீரான விலை கிடைப்பதை உறுதி செய்யவும், குளிர்பதனக் கிடங்கு வசதிகளை மேம்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.



