பைக் அல்லது கார் வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி வரப்போகிறது. ஆட்டோமொபைல் துறையில் விலை குறையும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாற்றம் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) விதிகளில் செய்யப்பட உள்ள திருத்தங்களால் ஏற்படக்கூடும். தற்போது பைக்குகள் மற்றும் கார்கள் மீது அதிகளவில் வரி விதிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, 350 சிசிக்கும் குறைவான பைக்குகளுக்கு 28% வரி, 350 சிசிக்கு மேற்பட்ட பைக்குகளுக்கு 31% வரை வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், சிறிய கார்கள் மீது 28% ஜிஎஸ்டி + 1–3% செஸ் வரி, எஸ்யூவிகளுக்கு மொத்தம் 50% வரை வரி விதிக்கப்படுகிறது.
ஆனால், மத்திய அரசு தற்போது ஜிஎஸ்டி அமைப்பை எளிமையாக்க திட்டமிட்டுள்ளது. புதிய மாற்றத்தின்படி, வரி இரண்டு அடுக்குகள் மட்டுமே கொண்டிருக்கலாம். ஒன்று 5%. மற்றொன்று 18%. இதன்படி 1 லட்சத்துக்கு விற்பனையாகும் பைக் ரூ.10 ஆயிரம் வரை குறைய வாய்ப்புள்ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், அத்தியாவசிய பொருட்களுக்கும், ஆட்டோமொபைல் துறைக்கும் பெரிய அளவில் விலை குறைவு ஏற்படும்.
இதன் மூலம், குறிப்பாக தொடக்க நிலை பைக்குகள் மற்றும் ரூ.10 லட்சம் வரை விலை கொண்ட கார்கள் விலையில் கணிசமான குறைவு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி பொதுமக்களுக்கு நிதிசுமையை குறைக்கும் வகையில் அமையும். ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்த முயற்சியை வரவேற்று வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
Read more: ஊடக துறையில் பணியாற்ற விரும்பமா? ரூ.40 ஆயிரம் சம்பளம்..! விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே..