வங்கக்கடலில் உருவாகி இருக்கும் டிட்வா புயல் காரணமாக ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை உட்பட தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. இந்த நிலையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் புயலின் திசை, வேகம் மற்றும் அமைப்பு மாறியதால், எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. ஆனாலும் புயலின் அடுத்தக்கட்ட தாக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் தலா ஒருவர் சுவர் இடிந்து உயிரிழந்துள்ளனர். மயிலாடுதுறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். புயலின் அடுத்தக் கட்ட தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் புதிய அறிவிப்பு வெளியிடும். அதன் அடிப்படையில் மாட்ட நிர்வாகங்கள் மேலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். வானிலை ஆய்வு மையத்தோடும் நாங்கள் தொடர்ந்து தொடர்பிலே இருந்து கொண்டிருக்கிறோம் என்றார்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 56 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 24 ஆயிரம், திருவாரூரில் 15 ஆயிரம் மயிலாடுதுறையில் 8 ஆயிரம் என மொத்தம் 56 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சொல்லி இருக்கிறார்கள். அதனைத் தண்ணீர் வடிந்த பிறகு கணக்கெடுத்து அதற்குரிய இழப்பீடு வழங்குவது பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவெடுப்பார்” எனத் தெரிவித்தார்.



