ஓமனின் ஷினாஸ் (Shinas) துறைமுகத்திற்கு அருகே, இந்தியக் குழுவினர் இருந்த சரக்குக் கப்பல் ஒன்று இன்று காலை தாக்குதலுக்கு இலக்கானதாக அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பரஸ்பர தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சமீபத்திய நாட்களில் நடந்த இத்தகைய மூன்றாவது சம்பவம் இதுவாகும்.
தாக்குதலுக்குள்ளான கப்பல் ‘எம்டி ஜல்வீர்’ (MT Jalveer) என அடையாளம் காணப்பட்டுள்ளது.. இது கினியா நாட்டு கொடியுடன் இயங்கும் கப்பலாகும். கப்பல் கண்காணிப்பு இணையதளமான ‘மெரைன் டிராஃபிக்’ (MarineTraffic) தகவலின்படி, 119.95 மீட்டர் நீளமும் 16.84 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ‘அஸ்பால்ட்/பிட்யூமன்’ (asphalt/bitumen) டேங்கர் கப்பலில் 20 இந்தியக் குழுவினர் இருந்ததாகக் கூறப்படுகிறது. கப்பலிலிருந்து புகை வெளியேறுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இதனிடையே, ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் இச்சம்பவம் குறித்து அறிந்திருப்பதாகவும், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் “ ஓமனின் ஷினாஸ் துறைமுகப் பகுதிக்கு அப்பால் ஒரு கப்பல் தொடர்பான சம்பவம் குறித்து இன்று காலை எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்,” என்று பதிவிட்டுள்ளது.
சமீப காலத்தில் நிகழ்ந்த இத்தகைய மூன்றாவது சம்பவம் இதுவாகும். முதல் சம்பவம் ஜூன் 8 அன்று நடந்தது.. இதில் ‘எம்டி மரிவெக்ஸ்’ (MT Marivex) கப்பலில் தாக்குதல் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அக்கப்பலில் மொத்தம் 24 பணியாளர்கள் (அனைவரும் இந்தியர்கள்) இருந்தனர்; அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
2-வது சம்பவம் ஜூன் 10 அன்று நடந்தது; இதில் ஓமன் வளைகுடாப் பகுதியில், பலாவு (Palau) நாட்டு கொடியுடன் இயங்கிய ‘எம்டி செட்டபெல்லோ’ (MT Settebello) என்ற டேங்கர் கப்பல் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இக்கப்பலில் 24 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், தாக்குதலில் மூவர் உயிரிழந்ததை அரசு உறுதிப்படுத்தியது.
“துரதிர்ஷ்டவசமாக, ஆரம்பத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட மூன்று இந்திய மாலுமிகளில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் வியாழக்கிழமையன்று தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உறுதுணையாக நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Read More : 3 இந்திய மாலுமிகள் பலி..! ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்..!



