புதுக்கோட்டை மாவட்டம் வரலாற்று செழுமை, இயற்கை அதிசயங்கள் மற்றும் அற்புதமான சிற்பக்கலைகளால் நிரம்பிய புனிதத் தலங்களின் மையமாகத் திகழ்கிறது. குடைவரைக் கோவில்கள், பல நூற்றாண்டுகள் பழமையான குகை ஓவியங்கள், சிற்பங்கள், கோட்டைகள், கோவில்கள் என எண்ணற்ற சுவடுகளை மறைத்து நிற்கும் இந்த மாவட்டத்தில், நார்த்தாமலையில் இருக்கும் ‘நீருக்குள் மூழ்கிய சிவலிங்கம்’ சுற்றுலாப் பயணிகளையும், பக்தர்களையும் கவரும் சிறப்பு தலமாக உள்ளது.
புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள நார்த்தாமலை, ஒன்பது சிறிய மலைக் குன்றுகளால் சூழப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலமலை, கோட்டைமலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண்மலை மற்றும் பொன்மலை ஆகிய மலைத் தொடர்கள் இப்பகுதியின் சான்றுகளாக நிற்கின்றன. ஒரு நாள் சுற்றுலாவுக்கு இந்த பகுதி சிறந்த இடமாக அமைகிறது.
மேலமலைக்கு செல்லும் பாதையில், தலையருவி சிங்கம் சுனை என்ற இடம் உள்ளது. இதன் ஆழம் சுமார் 15 அடியாகும். இந்த சுனையின் உள்ளேதான் மிகப் பிரசித்தியான ஜீரஹரேஸ்வரர் குடைவரைக் கோவில் அமைந்துள்ளது. கல்லில் செதுக்கப்பட்ட அழகிய சிவலிங்கம் இங்கு நீருக்குள் மூழ்கிய நிலையில் காணப்படுகிறது.
சுனையின் பள்ளத்தில் இறங்கிச் சென்றாலே இந்த குடைவரைப் பகுதி அணுக முடியும். இங்குள்ள கல்வெட்டுகள் இடத்தின் தொன்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, 1857ஆம் ஆண்டு ராஜா ராமச்சந்திர தொண்டைமான் ராணி இந்த சுனையில் நீர் இறைக்கப்பட்டு சிவலிங்கம் தரிசிக்கப்பட்டதாக ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுனை பெரும்பாலும் தண்ணீரால் நிரம்பியிருப்பதால், இங்கு இப்படியான அரிய கோவில் இருப்பது பலருக்கும் தெரியாமல் போகிறது. இதனால், ஆண்டுதோறும் உள்ளூர் மக்கள் ஒன்றுகூடி, சுனையில் தேங்கிய நீரை மோட்டார்களின் மூலம் வெளியேற்றி, சிவராத்திரி நாளில் எளிய விழா முறையில் சிவலிங்கத்தை தரிசித்து வழிபடுவது இப்பகுதியின் சிறப்பு.புதுக்கோட்டையின் மறைந்து போன வரலாறுகளை வெளிச்சம் போடும் இந்த நீருக்குள் இருக்கும் சிவலிங்கம், இயற்கை, ஆன்மிகம், வரலாறு மூன்றையும் ஒரொன்றாக இணைக்கும் மெய்யான அற்புதம்.



