கோவில்பட்டியில் காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ரவி பாண்டியன். இவருடைய மகன் சக்தி கணேஷ் (22) கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், அந்த பெண் சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சக்தி கணேஷ், வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல், சக்தி கணேஷ் தனது நண்பரை தொலைபேசியில் அழைத்துள்ளார். நண்பர் அழைப்பை ஏற்காததால், அவர் வாட்ஸ்அப்பில் உருக்கமான ஒரு ஆடியோவை அனுப்பியுள்ளார்.
அதில், “என்னால அவ இல்லாம வாழ முடியல.. உன்னிடம் கடைசியாக பேச வேண்டும் என்று நினைத்தேன், பேச முடியவில்லை. எதுவும் நினைத்துக் கொள்ளாத மச்சான். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் பார்ப்போம். எல்லாம் முடிந்துவிட்டது, அவ்வளவுதான். நீ காலையில் போனை எடுத்து பார்க்கும்போது, நான் உயிரோட இருக்க மாட்டேன். தனியார் கல்லூரி அருகே உள்ள தண்டவாளத்தில் சடலமாக இருப்பேன். என்னை வந்து பாரு மச்சான்…” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கோவில்பட்டி அருகே உள்ள பெத்தேல் ரெயில்வே கேட் பகுதியில் சென்ற சக்தி கணேஷ், அந்த வழியாக வந்த ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை மேற்கொண்டனர். மறுநாள் காலை, சக்தி கணேஷின் நண்பர் வாட்ஸ்அப் ஆடியோவை கேட்டதும், அதிர்ச்சி அடைந்து உடனடியாக சக்தியின் பெற்றோரிடம் தெரிவித்தார்.
ஆடியோவில் சொன்ன இடத்திற்கு சென்று நண்பர் பார்த்த போது இளைஞர் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மகனின் சடலத்தை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக, ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.