புனே நகரத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றிய பியூஸ் அசோக் (வயது 23) அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்தை சேர்ந்தவர் பியூஸ் அசோக். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம் போல் அலுவலக பணியில் ஈடுபட்டிருந்த பியூஸ், திடீரென “நெஞ்சுவலி” என கூறி ஒரு இருக்கையில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னர் யாரும் எதிர் பாராத வகையில் அலுவலக கட்டிடத்தின் 7-வது மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பியூஸ் இருக்கையில் இருந்த தற்கொலை கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், “என்னை மன்னிச்சுடுங்க அப்பா.. நான் உங்களுக்கு சிறந்த மகனாக இருக்க விரும்பினேன். ஆனால் நான் எல்லாவற்றிலும் தோல்வியடைந்துவிட்டேன். உங்களுக்கு ஒரு சிறந்த மகன் கிடைக்க வேண்டும். தயவுசெய்து எனக்காக உங்கள் நேரத்தை இதில் வீணாக்காதீர்கள். கவனமாக இருங்கள்…” என எழுதியுள்ளார்.
இந்த மனதை உருக்கும் கடிதம் தற்போது சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. இந்தச் சம்பவம், இளைஞர்களின் மன அழுத்தம் மற்றும் வேலை சார்ந்த மனச்சோர்வின் மீது சமூகமும், நிறுவனங்களும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. பியூஸின் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து முழுமையான விசாரணையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: மாணவர்கள் கவனத்திற்கு.. காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு!