திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேரத்தை நண்பகலுக்கு மாற்றக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரையை ஒட்டியவாறு அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயில், வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெறவுள்ள மகா குடமுழுக்கு விழாவுக்காக மிகுந்த விமர்சையாக தயாராகி வருகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சி காலை 06.15 மணி முதல் 06.50 மணிக்குள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் முறையாக வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் திருச்செந்தூர் கோவிலைச் சேர்ந்த விதாயகர் சிவராம சுப்பிரமணிய சாஸ்திரிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்குக்காக தற்போது குறிக்கப்பட்டுள்ள நேரத்தைக் காட்டிலும் அனைத்து முகூர்த்தங்களும் பொருந்தியதாக அதே தேதியில் நண்பகல் 12:05 முதல் 12:47 வரை உள்ள நேரத்தில் தான் குடமுழுக்கு நடத்தவேண்டும் என உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்
இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீமதி மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் 23.06.2025 அன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “ஜூலை மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவானது கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்ட 06:00 மணியளவிலேயே நடத்தலாம். இதற்கு எவ்வித எந்தவித தடையும் இல்லை. அதே சமயம் வருங்காலங்களில் கோவில் சார்பில் எந்த நிகழ்வு நடைபெற்றாலும் கோவில் விதாயகரிடம் எழுத்துப்பூர்வமாக நல்ல நேரத்தைக் குறித்து குடமுழுக்கை நடத்த வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேரத்தை நண்பகலுக்கு மாற்றக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கு தமிழக அரசின் இந்து சமய அற நிலையத்துறை திட்டமிட்டபடி, ஜூலை 7 ஆம் தேதி காலை 6.15முதல் 6.50க்குள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. ஜூலை 7 ஆம் தேதி குடமுழக்கு நடைபெற உள்ளதால் உச்ச நீதிமன்றத்தால் தற்போது தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Read more: தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்.. முதலமைச்சர் சொன்ன பதில்..